சர்கார்  படத்தின் கதை ’செங்கோல்’ எனும் படத்தின் கதைதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தெளிவாக அறிவித்த விவகாரம் வைரல் ஆகிக் கொண்டிருப்பதால் ’கேவலம்டா!’ என்று தலையிலடித்து பெரும் வேதனையில் உட்கார்ந்துவிட்டார் விஜய் என்று தகவல்கள் தடதடக்கின்றன.

 

விவகாரம் இதுதான்... ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ’சர்கார்’ படம் தீபாவளிக்கு திரை தொடுகிறது. இந்தப் படத்தினை தனது அடுத்த லெவல் வளர்ச்சிக்காக பெரிதாய் நம்பிக் கொண்டிருக்கிறார் விஜய். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசிய ‘நான் முதல்வரானால்’ பேச்சு, தமிழக அரசியலையே ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது. படம் ரிலீஸாகையில் படத்தில் இருக்கப்போகும் அரசியல் வசனங்களும், காட்சிகளும் மீண்டும் ஒரு பிரளயத்தை உருவாக்கும் என்கிறார்கள் அவரது மன்ற நிர்வாகிகள். இதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய்யும் ‘இந்தப் படத்துல அரசியல் மெர்சல பண்ணியிருக்கார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்’ என்று ஓவராய் பேசியிருந்தார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தை ஒரு விவகாரம் சுற்றிக் கொண்டிருந்தது. அது ‘சர்கார் படத்தின் கதை, வருண் ராஜேந்திரன் எனும் இயக்குநரின் கதைதான். தன் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடி அதில் சில மாற்றங்களை செய்து விஜய்யை வைத்து படமாக்கிவிட்டார்.’ என்று புகார் கொடுத்துள்ள தகவல்தான் அது. அரசல் புரசலாக ஓடிய இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தும் விதமாக இன்று ஒரு அறிக்கை வைரலாக ஆரம்பித்துள்ளது. அது தென்னிந்திய சினிமா எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் மற்றும் பொதுச்செயலாளர் மனோஜ்குமார் அவர்களின் கூட்டறிக்கைதான். 

அந்த அறிக்கையில் “தெளிவாக விவாதித்ததில் மெஜாரிட்டி மெம்பர்கள் சொல்லும் கருத்தின்படி பார்த்தால், செங்கோல் என்ற கதையும் சர்கார் படக்கதையும் ஒன்றே என முடிவு செய்கிறோம். 21-11-2007ல் நீங்கள் பதிவு செய்த செங்கோல் கதையும், சர்கார் படக்கதையும் ஒன்றே என்கிற சங்க முடிவை உங்களுக்கு தெரிவிக்கிறோம். உங்கள் பக்க நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை நாங்கள் தடை செய்ய மாட்டோம்.” என்று அதில் தெளிவாக சொல்லியுள்ளனர். 

இதைத்தான் விஜய்க்கு எதிரான மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் எடுத்து வைத்துக் கொண்டு “திருட்டுக் கதையில் நடிக்கிறார் விஜய். தான் நடிக்கும் படமே இப்படி ஊழலில்  உருவாகியிருக்கும் லட்சணத்தில், இவர் முதல்வராகி ஊழலை ஒழிப்பாராம். கேவலம்!” என்று இணைய தளங்களில் தட்டி காயப்போட துவங்கிவிட்டனர். இது விஜய்யின் கவனத்துக்குப் போக, மனிதர் டென்ஷனின் உச்சத்துக்கு போய் அமர்ந்துவிட்டார். 

ஏற்கனவே இதே முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதையும் இப்படித்தான் ‘திருட்டுக் கதை’ பஞ்சாயத்தில் சிக்கி அசிங்கப்பட்டது நினைவில் இருக்கலாம். எந்த மாஸ் நடிகரின் போட்டி படமும் இல்லாமல் தனி கெத்தாக தீபாவளிக்கு களத்தில் இறங்கப்போகிறோம்! என்று  விஜய் நினைத்து சீன் போட்டுக் கொண்டிருக்க, கதை விவகாரம் இப்படி சிக்கலாகி கேவலப்பட்டுவிட்டது. இந்நிலையில், விஜய் கடந்த சில நாட்களாகவே தி.மு.க.வை சீண்டியே பேசியும், செயல்பட்டும் கொண்டிருப்பதால் தி.மு.க. தரப்பு இந்த விவகாரத்தை பெரியளவில் எக்ஸ்போஸ் செய்து விஜய்யை சேதப்படுத்திட திட்டமிடுகிறதாம்.