சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஆதரவாக நின்று பாக்யராஜை மன உலைச்சலுக்கு ஆளாக்கி அவரை பதவி விலகும் அளவிற்கு நிர்பந்தம் செய்ததாக ஆர்.கே.செல்வமணி மீது புகார் எழுந்துள்ளது.  

சர்கார் கதை தன்னுடைய செங்கோல் படத்தின் கதை என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தை துணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் அணுகிய போதே அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. வருண் ராஜேந்திரனின் புகாரை விசாரணைக்கு கூட எடுத்துக் கொள்ளாமல் அவரை விரட்டுவதிலேயே சங்க நிர்வாகிகள் சிலர் இருந்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை துவக்கத்திலேயே ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பிற்கு லீக் செய்து அவர்களை உஷார்படுத்தியதிலும் சங்கத்தில் உள்ள சிலருக்கு முக்கிய பங்கு இருந்துள்ளது. 

ஒரு கட்டத்தில் வருண் ராஜேந்திரன் எடுத்த முயற்சியின் மூலமாக பாக்யராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்தே தனது செங்கோல் கதையை எப்படி திருடியிருக்கிறார்கள் என்பதை விலாவாரியாக வருண் எடுத்துரைத்துள்ளார். உடனடியாக  முருகதாஸ் தரப்பை பாக்யராஜ் அணுகியுள்ளார். ஆனால் கதை திருடிய அனுபவத்தில் பாக்யராஜை ஒரு பொருட்டாகவே முருகதாஸ் கருதவில்லை. மேலும் சர்கார் படத்தின் கதை சுருக்கத்தையும் தர முருகதாஸ் மறுத்துள்ளார்.  

இதன் பிறகு தான் சர்கார் கதை திருடப்பட்ட கதை என்கிற சந்தேகம் உள்ளது எனவே கதைச் சுருக்கத்தை கொடுக்குமாறு சங்க லெட்டர் பேடில் முருகதாஸ்க்கு கடிதத்தை அனுப்பியுள்ளார் பாக்யராஜ். நிலைமை தீவிரம் அடைவதை உணர்ந்தே கதை சுருக்கத்தை முருகதாஸ் அனுப்பியுள்ளார். ஆனாலும் கூட எழுத்தாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஆர்.கே செல்வமணி மூலம் பிரச்சனையை சரி கட்ட முருகதாஸ் தரப்பு முயற்சித்துள்ளது. இதற்கு முழு ஆதரவு கொடுத்த செல்வமணி, சர்கார் கதை திருடப்பட்டது இல்லை என்று பாக்யராஜிடம் எடுத்துரைத்துள்ளார்.

 

ஆனால் எழுத்தாளர் சங்கத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்று என்கிற முடிவுக்கு வந்து கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் ஆர்.கே.செல்வமணி மட்டும் சர்கார் கதையும் – செங்கோல் கதையும் வேறு என்று அறிக்கை கொடுத்துள்ளார். இதன் பிறகு வழக்கு நிதிமன்றம் சென்ற நிலையில் ஒரு செட்டில்மென்ட் பேசி விவகாரம் முடிவுக்கு வந்தது. ஆனால் எழுத்தாளர் சங்கத்தின் தன்னை மீறி பாக்யராஜ் செயல்பட்டதை செல்வமணியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

பிரச்சனையின் போது சர்கார் படத்தின் கதையை பாக்யராஜ் வெளிப்படையாக கூறிய விவகாரத்தை செல்வமணி விஸ்வரூபமாக்கினார். சன் பிக்சர்ஸ் மூலமாக பாக்யராஜூக்கு எதிராக எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்க செல்வமணி ஏற்பாடு செய்துள்ளார். இதனை அறிந்தே மனம் நொந்து போன பாக்யராஜ் சன் பிக்சர்சிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்துள்ளார். ஆனால் செல்வமணி போன்றோருடன் மோதி தன்னுடைய இமேஜை கெடுத்துக் கொள்ள விரும்பாமால் ராஜினாமா செய்துள்ளார்.