முதல் படமான தீனா’ தவிர்த்து தனது அனைத்துப்படங்களிலும் கதைத்திருட்டு சர்ச்சையில் மாட்டிவந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக தனது திருட்டை ஒப்புக்கொண்டு மண்னைக்கவ்வினார். 

உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் முன்னிலையில் ‘சர்கார்’ கதைத்திருட்டு தொடர்பான விசாரணை நடந்துவந்தது.  இன்று தீர்ப்பு அறிவிக்கப்படுவதாக இருந்த இந்த விசாரணைக்கு இயக்குநர் முருகதாஸ் சன் பிக்‌ஷர்ஸ் தயாரிப்பாளர்களும் ஆஜராகியுள்ளனர். வழக்கில் பாதிக்கப்பட்ட உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனின் ஆதரவாளர் இயக்குநர் பாக்கியராஜும்  கோர்ட்டுக்கு வந்துள்ளார். 

இந்நிலையில் சற்றுமுன்னர் நீதிபதியிடம் வருண் ராஜேந்திரனின் கதையை திருடியதை ஒப்புக்கொண்ட முருகதாஸ் அவருடன் சமாதானமான செல்வதாகக் கூறி, அது தொடர்பான மனுவையும் நீதிபதி சுந்தரிடம் சமர்ப்பித்தார்.

அந்த மனுவில் ராஜேந்திரன் என்கிற வருண் ராஜேந்திரனுடன் தானும் படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும் சமரசமாக செல்வதாக முடிவு செய்திருப்பதாகவும், வருண் ராஜேந்திரன் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் கேட்டுக்கொண்டபடி ‘கதை- நன்றி வருண் ராஜேந்திரன்’ என்று போட ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார். நேற்றுவரை தனது வாதத்தில் பிடிவாதமாக இருந்த முருகதாஸ் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளதால் இனி பட ரிலீஸுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் ‘சர்கார்’ கதை உரிமையை வேற்றுமொழிக்கு விற்க வருண் ராஜேந்திரனுக்கு பெருந்தொகையைக் கொடுக்கவேண்டிவரும்.