ஊழல், மக்கள்  பிரச்னையை கண்டு கொள்ளாமை, அவல நிலையில் அரசு அலுவலகங்கள், அலட்சியத்தால் மரிக்கும் மனித உயிர்கள்...என்று வெளுத்துக் கட்டி வேட்டு வைத்துள்ளார்கள் ஆட்சிக்கு!

சர்கார் கதையை ஹைலைட்ஸ் பாயிண்டுகள் வடிவில் பார்ப்போம் இங்கே!...

*    கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சைதான் விஜய்யின் கதாபாத்திரத்துக்கான இன்ஸ்பிரேஷன். 

*    சர்காரில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் சுந்தர்! கூகுளை மாற்ரி ஜி.எல். என்றாக்கி, அதன் சி.இ.ஒ.வாக இருக்கிறார். 

*    கீர்த்திக்கு வழக்கமான டான்ஸிங் டால் வேஷம்தான். ஆனால் வரலெட்சுமியோ ஹைடெக் லெட்சுமியாகி வந்து பின் அதிரடியாய் வில்லத்தன அவதாரம் எடுக்கிறார். 

*    பழ கருப்பையா, ராதாரவி இருவருமே நெகடீவ் அரசியல்வாதிகளாய் வெளுத்திருக்கின்றனர். 

*    முதல்வன், இந்தியன், ரமணா, கத்தி, சிட்டிசன் என தமிழின் பல ‘கருத்து’ படங்களின் க்ளிஷேக்களும் உண்டு. 

சரி கதைக்கு வருவோம்!...

*    ஜி.எல். கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் (விஜய்) ஓட்டு போடுவதற்காக தமிழகத்துக்கு வருகிறார். மீடியா வெளிச்சத்தில் பூத்தினுள் நுழைந்து, ஓட்டு போட முயல்கையில் அவரது ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டுவிட்டது. 

*    கடுப்பில் வெளியேறும் அவர் சட்டத்தை பிரித்து மேய்ந்து ஒரு செக்‌ஷனை கண்டுபிடிக்கிறார். அதன்படி ’கள்ள ஓட்டு போடப்பட்ட இடத்தில் மறு தேர்தல் நடைபெற வேண்டும்’ என்று சட்டம் சொல்கிறது. அங்கே மறு தேர்தலுக்கு தயாராகிறது. 

*    இந்த நிலையில் ஆளும் கட்சியின் அரசியல் புள்ளியான ராதாரவியுடன் விஜய்க்கு மோதல் உருவாகிறது. ராதாரவி ‘கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகளுக்காக நீ கஸ்டமர்களை ஏமாத்தலையா?’ என்கிறார், அதற்கு விஜய் தரும் சுரீர் பதில்கள் இருவருக்கும் இடையில் பெரும் மோதலை உருவாக்குகின்றன. 

*    விளைவு! ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக பப்ளிக்கிடம் பேசும் விஜய் ‘யார் யார் ஓட்டெல்லாம் கள்ள ஓட்டாக போடப்பட்டுவிட்டதோ அவங்களெல்லாம் என்னை மாதிரி சட்டத்தோட கதவை தட்டுங்க.’ என்கிறார். விளைவு பல ஆயிரக்கணக்கானோர் இந்த சட்டப்பிரிவில் முறையிடு, மாநிலத்துக்கே மறு தேர்தல் நிலை உருவாகிறது. 

*    ’மறு தேர்தல் நடத்தினால் அதிக செலவு ஏற்படும்’ என்று தேர்தல் ஆணையம் மறுக்கையில், ‘தொலைஞ்சு போன பத்தாயிரம் ரூபாய் செயினை கண்டுபிடிக்க, போலீஸ் இருபத்தஞ்சாயிரம் ரூபாய் செலவு பண்ணுது. செலவாகுதுன்னு சொல்லி விட்டுட முடியுமா? ஓட்டுங்கிறது ஜனநாயக நாட்டில் மக்களின் அடிப்படை உரிமை’ என்று நியாயம் பேசுகிறார். 

*    இதற்குள் ராதாரவி, பழ கருப்பையா டீமுடன் விஜய்க்கு ஏற்படும் உரசல், விஜய்யை தமிழகம் முழுவதும் நல்லவர்களை தேர்தலில் நிறுத்தி ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் மாற்றாக ஒரு டீமை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்துகிறது. 

*    மீண்டும் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக ஒவ்வொரு தொகுதி மக்களிடமும் பேசி, ‘உங்க தொகுதியில் நீங்க நம்புகிற 3 நல்ல நபர்களை சிபாரிசு பண்ணுங்க. அதுல ஒருத்தரை நாங்க தேர்ந்தெடுக்குறோம்.’ என்கிறார். மக்களும் அனுப்புகின்றனர். விஜய் அண்ட் கோ சுயேட்சைகளாக தேர்தலை சந்திக்கிறது. 

*    இந்நிலையில் பழ.கருப்பையாவின் மகளும், விஜய் பற்றி முன்னரே எச்சரித்துக் கொண்டிருந்தவருமான வரலெட்சுமி  வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருகிறார். தன் அப்பாவை போட்டுத் தள்ளிவிட்டு தானே முதல்வர் வேட்பாளராக தேர்தலில் களமிறங்குகிறார். 

*    வரு செய்யும் சில ட்ரிக்குகளால் விஜய்யின் நிலை சரிகிறது. ‘நான் கார்ப்பரேட் கிரிமினல்’ என்று விஜய் கெத்து காட்ட, ‘நான் கருவிலேயே கிரிமினல்’ என்று வரு எகிற, பட்டாஸ் பறக்கிறது திரையில்.

*    இந்த நிலையில் தேர்தலை நோக்கி நகரும் படத்தில் நிருபர் முத்துக்குமார் கொலை, பழ.கருப்பையாவின் ஊழல் ஆதாரங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்! என்று வழக்கமான மசாலாத்தனங்கள் உள்ளே வருகின்றன.  தேர்தல் நாளில் வரலெட்சுமிக்கு ஆதரவான நிலையில் வாக்குகள் விழுந்து கொண்டிருக்க, விஜய் செய்யும் சூப்பர் ஹீரோயிஸங்கள் சூழலை மாற்றுகின்றன. 

*    தேர்தல் நாளில் பாதி நாள் முடிந்த நிலையில், வரலெட்சுமிதான் பழ கருப்பையாவை கொன்றார் என்பதை வருவின் அம்மா கேரக்டரை அறிவிக்க வைப்பது, முத்துக்குமாரின் பொணத்தை தோண்டி எடுக்க வைப்பது, ஹார்டு டிஸ்கில் உள்ளதை உலகமறிய செய்வது என வழக்கமான விஷயங்கள் தெறிக்கின்றன. மரண மாஸ்  கிளைமேக்ஸ் சண்டைக்கு பின் தேர்தல் முடிகிறது, விஜய் அண்ட் கோ ஜெயிக்கிறது. 

*    விஜய்யை முதல்வராக சொல்லி ஆளாளுக்கு வர்புறுத்த, அவரோ ‘நீங்க ஆளுங்க, நான் எதிர்கட்சியா உட்கார்ந்து கேள்வி கேட்கிறேன். அப்போதான் நல்ல அரசாங்கம் நடக்கும்.’ என்கிறார். 
இத்துடன் சுபம்.!

மொத்தத்தில் தெறித்து மெர்சல் காட்டுகிறது சர்கார்!