இதுவரை இந்தியத்திரையுலகம் காணாத புதுமையாக, ஒரு முறை சென்ஸார் செய்ப்பட்ட படம் மறுபடியும் வாண்டட் ஆக வண்டியில் ஏற்றப்பட்டு மறுசென்ஸார் ஆகி தியேட்டர்களுக்கு திரும்பியுள்ளது. ‘சர்கார்’ இன்று மதியக்காட்சிகள் முதல் மறுசென்ஸார் செய்யப்பட்ட படமாக திரையிடப்படுகிறது.

நேற்று மாலைமுதல் ரஜினி,கமல்,விஷால், இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட்ட திரையுலகின் அத்தனை முக்கிய புள்ளிகளும் படத்தின் மறு தணிக்கை என்பது அரசபயங்கரவாதம் என்கிற ரீதியில் எதிர்ப்பு தெரிவித்தும், தியேட்டர்களில் காட்சிகளைத் தொடர்வதில் சிக்கல் இருந்ததால் தயாரிப்பாளர் தரப்பு மறு தணிக்கைக்கு முன்வந்தது. 

இதையொட்டி இன்று காலை 10.30 மணிக்கு அவசரமாகக் கூடிய சென்ஸார் போர்டு அதிகாரிகள் அ.தி.மு.க. அரசு விரும்பிய அத்தனை காட்சிகளையும் சகட்டுமேனிக்கு வெட்டி எறிந்து பரிதாபமான ‘சர்கார்’ ஒன்றை படக்குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சர்காரில் வில்லியின் கோமளவள்ளி என்ற பெயர் மாற்றப்பட்டதோடு, இலவச மிக்ஸி,கிரைண்டர்களை எரிக்கும் காட்சி, அரசு மருத்துவமனையில் அமைச்சர்களை விளாசும் காட்சி, மற்றும் வில்லன் பழ,கருப்பையா தொடர்பான 4 காட்சிகள் உட்பட பல காட்சிகள் அகற்றப்பட்டன. இந்த அவசரக்கூட்டத்தில் அ.தி.மு.க பரிந்துரைத்த எந்த ஒரு காட்சிக்கும் தயாரிப்பாளர் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.