படத்தின் கதை,திரைக்கதை,இயக்கம் நானேதான் ஆனா போட்டிருக்க திரைக்கதைங்குற சட்டை வருண் ராஜேந்திரனுடையது என்பதுபோல நீளமாக ஒரு விளக்கக்கடிதம் போட்டிருக்கிறார் முருகதாஸ்.

பாக்கியராஜ் புண்ணியத்தால், வலைதளங்களின் வரம்புமீறிய கற்பனையால் சுமார் நூறுமுறையாவது ஏற்கனவே படித்துமுடித்தீர்களே அந்தக் கதைதான் என்று சொல்லி நகர்ந்து விட்டால் விமர்சனத்தை ஒப்பேத்த முன்னூத்திச்சொச்ச வார்த்தைகளுக்கு எங்கே போவது?

ஸோ ப்ளீஸ் இன்னொருமுறை கதையை நீங்கள் படித்துத்தான் ஆகவேண்டும்.

தன்னுடைய ஓட்டைப்போடுவதற்காக குட்டைப்பாவாடை அணிந்த பெண் செக்யூரிட்டுகளுடன் அமெரிக்காவிலிருந்து தனி ஃப்ளைட் பிடித்துவரும் சுந்தர ராமசாமி தனது ஓட்டை வேறு யாரோ போட்டது கண்டு வீறுகொண்டு எழுகிறார்.என் ஓட்டை நான் போட்டே தீருவேன் என்று அடம்பிடித்து கோர்டுக்குப் போய் ஸ்டே வாங்க ஆளும்கட்சி கொந்தளிக்கிறது.

அத்தோடு நிற்காமல் தன்னோட ஓட்டை அடுத்தவன் போட அனுமதிகிறவன் பொண்டாட்டியை அடுத்தவனோடு அனுமதிப்பதற்குச் சமம் என்பது மாதிரி  உசுப்பேத்த, தமிழகம் முழுவதும் மூனு லட்சத்து அறுபதினாயிரம் பேர் தங்கள் பெயரில் விழுந்த கள்ள ஓட்டை திரும்ப தாங்களே போடவேண்டும் என்று வழக்குப் போட,பதவிபிரமாணம் ஏற்க இருக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி…ஸாரி முதல்வர் பழ.கருப்பையாவின் பதவி பறிபோகிறது.

அரசியல்வாதிகளுக்குத்தான் எப்பவும் ஒரு நரம்பு அதிகமாச்சே.சும்மா இருப்பார்களா? விஜய்யை வெட்டிக்கொள்ள திட்டமிடுகிறார்கள். அந்த அரசியல்வாதிகளை விட நம்ம விஜய்க்கு இரண்டு நரம்பு அதிகமாச்சே… அவர் எதிரிகளை நொட்டாங்கையால் துவம்சம் பண்ணி, தேர்தலில் 234 வேட்பாளர்களை நிறுத்தி, அதில் 210 வேட்பாளர்களை ஜெயிக்கவைத்து…. அடேய் போதும் நிறுத்து…என்கிறீர்களா? உத்தரவு.

ஃபார் யுவர் கைண்ட் அட்டென்சன் மிஸ்டர் அன்புமணி ராம்தாஸ் படத்தின் அறிமுகக் காட்சியில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரைக்கும் எண்ணிக்கையில்லாமல் விஜய் புகைத்துத்தள்ளிக்கொண்டேயிருக்கிறார்.

படத்தில் விஜய் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் என்று சொல்லப்படுகிறார். யு.எஸ்.குளிருக்கு மாட்டிகொண்ட ஸ்வெட்டர் மட்டும் சட்டையை சென்னை வெயிலிலும் கழட்டிவைக்காமல் இருப்பதைத் தாண்டி ஒரு கிரிமினல் காரியமும் அவர் செய்யவில்லை. அஜீத் போன்றே விஜய் நடிப்பைப் பற்றியும் எதுவும் எழுதாமல் இருப்பதே நல்லது. நாயகி கீர்த்திசுரேஷ் இப்பட ஷூட்டிங் சமயத்தில் அநியாயத்துக்கு வேலவெட்டி இல்லாமல் இருந்தாரா அல்லது பிற்காலத்தில் ‘மிடூ’ போட உதவும் என்று நினைத்தாரோ தெரியவில்லை, ஒரு காட்சி விடாமல் விஜயை உரசிக்கொண்டே இருக்கிறார்.

வசனம் என்று கார்டு போடுகிற இடத்தில் முருகதாஸின் பெயருக்கு அடுத்தபடியாக ஆசான் ஜெயமோகனின் பெயர் வருகிறது. ஹீரோவுக்கு தனது இலக்கிய ஆசான் சுந்தர ராமசாமியின் பெயரைச் சூட்டிவிட்டு டிஸ்கசனில் ஏதோ ஒரு ஈசான மூலையில் போய் உட்கார்ந்துகொண்டார் போல.

அனுபவம் பேசுகிறது என்பார்களே அதுபோல், முதல்வர் வேடத்தில் பழ.கருப்பையாவும், ரெண்டு என்கிற நம்பர் டூ அரசியல்வாதி பாத்திரத்தில் ராதாரவியும் அசத்துகிறார்கள். வரலட்சுமி படத்தில் தன் அப்பாவுக்கு செய்கிற ஒரே ஒரு காரியத்துக்காகவே அவருக்கு அரசியலுக்கு வரக்கூடிய அத்தனை தகுதியும் இருக்கிறது.

சன் டி.வி.யை தயாரிப்பாளர்களாக வைத்துக்கொண்டே அக்கட்சியின் பல தில்லாலங்கடி காட்சிகளை படத்தில் வைத்திருப்பதன் தான் ஒரு சினிமா கிரிமினல் என்பதை செம போல்டாக வெளிப்படுத்தியிருக்கிறார் முருகதாஸ்.

ஆனாலும் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் காலி. 166 நிமிடம் ஓடுகிற படத்தில் ஒரு 36 நிமிடத்தை எடிட்டிங் டேபிளில் காவு கொடுத்திருக்கலாம்.

மற்றபடி நான்கு ஃபைட்கள், சாராயக்கடை பாடல் உள்ளிட்ட ஐந்து பாடல்கள் அதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாயாக ஆறு சோஷியல் மெஸேஜ்கள் அடங்கிய கொஞ்சம் காஸ்ட்லி பேக்கேஜ்தான் சர்கார்.

சினிமாவில் ஓவர் எதிர்பார்ப்பு படத்துக்கு ஆகாது என்பார்கள். அதற்கு இந்த சர்கார் ஒரு சரியான உதாரணம்.

ஐயஹோ சொல்ல மறந்துவிட்டேனே இந்தப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான். ஆமாங்க அதே ரகுமானேதான்.