தீபாவளி வெளியீடாக சர்கார் உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. அமெரிக்காவில் இதற்கு முன்பு வெளியான விஜய் படங்கள் எல்லாவற்றையும் விட மிக அதிக திரையரங்குகளில் சர்கார் வெளியானது. படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் சர்கார் வெளியாகி முந்தைய வசூல் சாதனைகளை எல்லாம் தகர்த்து எறியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
   

ஆனால் அமெரிக்காவில் சர்கார் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை. 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான நிலையில் காலை காட்சிகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன. இரவு மற்றும் செகன்ட் ஷோ மட்டுமே ஹவுஸ் புல் ஆகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் முதல் நாள் சர்காரால் வெறும் 3.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே வசூலிக்க முடிந்ததது.
   

ரஜினியின் கபாலி திரைப்படம் அமெரிக்காவில் முதல் நாளில் சுமார் 20லட்சம் டாலர்களை வசூலித்து சாதனை படைத்திருந்தது. ஜூன் மாதம் வெளியானரஜினியின் காலா கூட சுமார் 6 லட்சம் டாலர்களை வசூலித்து கொடுத்தது. ஆனால் சர்காரால் வெறும் 3.30 லட்சம் டாலர் தான் முதல் நாளில் வசூலிக்க முடிந்துள்ளது. அமெரிக்காவில் படம் வெளியான தினம் திங்கட்கிழமை ஆகும்.

திங்கட்கிழமை அங்கு வாரத்தின் முதல் பணி நாள் என்பதால் சர்காரை பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் படம் குறித்து மிக்ஸ்டு ரிவ்யூ வருவதால் பெரிய அளவில் இனி அமெரிக்காவில் வசூல் இருக்காது என்றே சினிமா வர்த்தகர்கள் கூறுகிறார்கள். அதே சமயம் ரஜினியின் காலா கூட வார நாளில் தான் ரிலீஸ் ஆனது. ஆனால் அங்கு ரஜினி ரசிகர்கள் அதிகம் என்பதால் அமெரிக்காவில் அவரது படத்திற்கு எப்போதும் நடுத்தர அளவில் வசூல் இருக்கும் என்கிறார்கள்.