நடிகர் சங்கத்திலிருந்து ராதாரவி , சரத்குமாரை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரைத்த உயர்நீதிமன்றம் , சங்கத்தை விட்டு சுத்தமாக நீக்கி விட்டதால் சஸ்பெண்ட் வழக்கை முடித்து வைத்தார்.

தென் இந்திய நடிகர் சங்கத்திலிருந்து நடிகர் ராதாரவி , சரத் குமார் மற்றும் வாகை சந்திரசேகரை சஸ்பெண்ட் செய்து விஷால் தரப்பு நடவடிக்கை எடுத்தது. தாங்கள் ஆயுட் கால உறுப்பினர்கள் , வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்குடன் தங்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர் அதை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று ராதாரவி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

 இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ராதாரவி ,சரத் குமார் , சந்திரசேகர் மூவரையும் ஒருமனதாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். 

 இதனால் அவர்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டனர். இதை சரத்குமார் , ராதாரவி தரப்பினர் ஏற்று கொள்ளவில்லை. சஸ்பெண்ட் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது எப்படி நீக்க முடியும் இது சட்டபூர்வமற்ற பொதுக்குழு என்று தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து ராதாரவி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை எடுத்துகொண்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் நிரந்தரமாக உங்களை நீக்கிவிட்டதாக பேப்பரில் செய்தி வந்துள்ளது. நிரந்தரமாக நீக்கியுள்ளதால் சஸ்பெண்ட் வழக்குக்கு இனி வேலை இல்லை ஆகவே வழக்கை முடித்து வைக்கிறேன் என்று முடித்துவைத்து உத்தரவிட்டார். 

நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து தனியாக வழக்கு போட்டால் அதை எடுத்து விசாரிப்பதாக அவர் தெரிவித்ததன் பேரில் ஆலோசித்துவிட்டு போடுவதாக ராதாரவி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.