துப்பாக்கி 2 குறித்து வெளியான ரகசியம்... விஜய் ரசிகர்களை தெறிக்கவிட்ட சந்தோஷ் சிவன் டுவிட்...!

'பிகில்' திரைப்படம் ரிலீஸ் ஆனதால் தீபாவளியை விஜய் ரசிகர்கள் இன்றே கொண்டாட தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ள டுவிட், விஜய் ரசிகர்களுக்கு புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து இன்று வெளியாகியுள்ளது. இறுதி நேரத்தில் தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவே, அதிகாலையில் இருந்தே தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் மாஸ் காட்டி வருகின்றனர். சோசியல் மீடியா முதல் தியேட்டர்கள் வரை அனைத்து இடங்களிலும் ”பிகில்” திருவிழா களைகட்டி வருகிறது. 

இதனிடையே, விஜய்யின் துப்பாக்கி படத்தில் கேமராமேனாக பணியாற்றிய சந்தோஷ் சிவன் ”துப்பாக்கி 2” குறித்த பதிவை வெளியிட்டுள்ளது, விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க வைத்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற ”ஸ்லீப்பர் செல்ஸ்” என்ற வார்த்தை அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை பேசுபொருளாக மாறியது. 

”பிகில்” படத்தில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய் பேசிய அதிரடி அரசியல் வசனங்கள், ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையே உருவாக்கியது. இதனால் படம் வெளியாகுமா? என்பதே பெரும் கேள்விக்குறியானது. இந்நிலையில் துப்பாக்கி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவன், ”பிகில்” பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததோடு மட்டுமில்லாமல், ”துப்பாக்கி 2” படத்திற்கு வெயிட்டிங் என்ற சரவெடியையும் கொளுத்திப் போட்டுள்ளார்.

’துப்பாக்கி’ படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தர்பார் படத்தின் ஷீட்டிங்கில் பிசியாக உள்ளார். அந்தப்படத்திற்கு கேமராமேனாக பணியாற்றி வரும் சந்தோஷ் சிவன், ’துப்பாக்கி 2’ படத்திற்கு வெயிட்டிங் என பதிவிட்டுள்ளது. விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.