நாயகி தாரா அலிசா பெர்ரி, அய்யங்காராத்துப் பெண் அவரைக் காதலிக்க ஏராளமானோர் கியூவில் நின்று  போட்டி போடுகிறார்கள். அவருக்கோ யாருக்கும் பயப்படாத ஒரு ரவுடியைக் காதலித்துக் கல்யாணம் செய்யவேண்டும் என்று ஆசை. அந்த ரவுடியும் அய்யங்காராக இருக்கவேண்டும் என்பது ஒரே நிபந்தனை.அப்படிப்பட்ட நாயகி ஒரு சந்தர்ப்பத்தில்,புரட்டாசி மாதம் பெருமாளைக் கும்பிட நெற்றியில் நாமமிட்ட நாயகன் சந்தானத்தைப் பார்த்து காதல் கொள்கிறார்.

ஆனால் சந்தானம் அவாள் இல்லை என்ற உண்மை தெரிந்ததும் பிரிவு வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது? என்பதுதான் அக்கியூஸ்ட் நம்பர் ஒன்னின் கதை. அறிமுகக் காட்சியில் தொடங்கி காமெடி அட்ராசிட்டியில் கலக்குகிறார் சந்தானம்.அப்போதிருந்து ஒரே அதிரிபுதிரிதான்.தொடக்கத்திலிருந்து கடைசிவரை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கிறார். நாயகியை ஆஃப்பாயில் சாப்பிடச் சொல்லி கடைசி நேரத்தில் தட்டிவிடும் காட்சியில் பிராமணர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்திருக்கிறாராம்.

சந்தானத்தின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர், நண்பர்களாக மாறன், தங்கதுரை, கிங்ஸ்லி ஆகியோரும் அருமையாகப் பொருந்தியிருக்கிறார்கள்.வசனங்களில், பிராமணர்கள் பாஷையும் சென்னை மக்கள் மொழியும் கலந்து வரும்போது சிரிப்புக்கு கொஞ்சமாக கியாரண்டி கொடுக்கிறார்கள்.

நாங்க ஆச்சாரமா இருப்போம் என்று அனந்தராமன் (நாய்கியின் அப்பா யாட்டின் கார்கேயர்)சொல்லும்போது நாங்க பீச்சோரமா இருப்போம் லோகு நாயகனின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர்) சொல்வது செம எதிர்வினை.நாயகி தாரா அலிசா பெர்ரி நல்ல தேர்வு. சந்தானத்தைப் பார்த்தவுடன் காதல் கொண்டு உதட்டு முத்தம் வைத்து அடுத்த காட்சியிலேயே நீ வேண்டாம் என்னும் வேடம். அய்யங்கார் பெண்களை குணத்திலும் நடிப்பிலும் அப்படியே பிரதியெடுத்திருக்கிறார்.

ஊரிலேயே நேர்மையான ஒருவராக அறிமுகமாகும் வட்டாட்சியர் அனந்தராமனின் உண்மை முகம் தெரியும்போது அதிர்ச்சி. இப்படித்தான் எல்லோரும் இருக்கிறார்கள் என்கிற அயர்ச்சியும் ஏற்படுகிறது. அந்த வேடத்தில் நன்றாக நடித்திருக்கிறார் யாட்டின் கார்கேயர்.மொட்டைராஜேந்திரன் மற்றும் அவருடைய குழுவினர், யார்ட்டின்கார்கேயரின் மச்சானாக வரும் சேஷு ஆகியோரும் நாங்களும் சளைத்தவர்களில்லை என்று வயிற்றைப் பதம் பார்க்கிறார்கள்.

கோபிஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு நன்று. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஒரு அய்யராத்து சப்ஜெக்ட்டுக்கு சந்தோஷ் நாராயணன் தேர்ந்தெடுத்திருக்கும் கானா மற்றும் குத்துப்பாட்டு டியூன்களுக்கு ஒரு சபாஷ்.லியோஜான்பால் படத்தொகுப்பில் படம் அளவாக இருக்கிறது.

இடைவேளை வரை கலகலவெனப் போகிறது படம். அதற்குப் பிறகு சில வேகத் தடைகள். அவற்றையும் தாண்டி அங்காங்கே  நகைச்சுவை இருக்கிறது. ஒரு பொணத்தை வைத்துக்கொண்டு அளவுக்கு மீறி லூட்டி அடிக்கும்போதே அதில் எதோ ஒரு ட்விஸ்ட் இருப்பதை யூகிக்க முடிவது படத்தின் மைனஸ்களில் ஒன்று. எழுதி இயக்கியிருக்கும் கே.ஜான்சனுக்கு இது முதல்படம். எல்லோரையும் சிரிக்க வைப்பதில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். ஆனால் பிராமணர்களைச் சீண்டுவதில் படுதோல்வி அடைந்திருக்கிறார்.