அதனைத் தொடர்ந்து, பல்வேறு படங்களில் கமிட்டாகியுள்ள சந்தானம், முதலில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தின் ஷுட்டிங்கில் கவனம் செலுத்தி வந்தார்.
'பூமராங்' படத்தின் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் கண்ணனே தயாரித்து இயக்கும் இந்தப் படத்தின் ஷுட்டிங், கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

இந்தப் படத்திற்காக சிலம்பம் கற்றுக்கொண்டு நடித்துள்ளார் சந்தானம். இதில், அவருக்கு அலிஷா பெர்சி மற்றும் ஸ்வாதி முப்பலா என இரண்டு அழகு பதுமைகள் நடித்துள்ளனர். 

முக்கிய கேரக்டரில் பழம்பெரும் நாயகி செளகார் ஜானகி நடித்துள்ளார்.கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இந்தப் படத்தின் ஷுட்டிங், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. 

ஒரே கட்டமாக சந்தானம் கால்ஷீட் கொடுத்ததால், ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டாராம் கண்ணன். இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்க வேண்டியதுள்ளதாம்.
அதுமட்டுமன்றி, இந்தப் படத்தில் 30 நிமிட காட்சிகள் 1980-களில் நடைபெறுவது போன்று எடுக்கப்பட்டுள்ளதாம். 

இந்தக் காட்சிகளை ஹைதராபாத்தில் 80 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரங்கில் படமாக்கியுள்ளது படக்குழு. 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. 

விரைவில் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவும்  திட்டமிட்டுள்ளது. 
இந்தப் படத்தை முடித்தக் கையோடு, நடிகர் சந்தானம், அடுத்து அறிமுக இயக்குநர் கார்த்தி யோகி இயக்கும் 'டிக்கிலோனா' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இந்தப் படத்தின் ஷுட்டிங், வரும் நவம்பர் 18ம் தேதி  முதல் தொடங்குகிறது. அடுத்தடுத்து படங்களை முடித்துக் கொடுப்பதில் நடிகர் சந்தானம் காட்டிவரும் அசுர வேகத்தை தமிழ் திரையுலகமே ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது.