சொந்த வாழ்க்கையை செல்லுலாய்டில் வடித்து வரும் வழக்கம் இந்திய சினிமாவில் அதிகரித்து வரும் நிலையில், பிரபல டென்னிஸ் வீரரும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையுமான  சானியா மிர்சாவின் கதையும் ’Ace Against Odds’ என்ற பெயரில் படமாக்கப்படவிருக்கிறது. இத்தகவலை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சானியாவே உறுதி செய்தார்.

ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, மேரி கோம் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோ பிக் திரைப்படங்களும் உருவாகி வருகின்றன.

தனது படம் உருவாவது குறித்து,ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சானியா செய்தியாளர்களைச் சந்தித்த போது,“ வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இது அருமையான விஷயம். பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த கட்ட நகர்வை  எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

பரஸ்பர புரிதலின் அடிப்படையில் இதன் பணிகள் நடைபெறுகின்றன. இதில் எனது பங்களிப்பு முக்கியமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இது எனது கதை. அதனால் நான் சொல்லியே ஆகவேண்டும். நாங்கள் ஆரம்பகட்டத்தில் தான் இருக்கிறோம். ஆகையால் இன்று இதை அறிவிக்கிறோம். இயக்குநர் திரைக்கதையை எழுத வேண்டும், ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.இந்தியத் திரையுலகில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் முன்னெப்போதையும் விட அதிகமாக வெளியாகிவருகின்றன. பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படமானாலும் விளையாட்டுத் துறையிலிருந்து சற்று அதிகமாகப் படங்கள் வெளியாகின்றன. இப்படத்தை ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார்.பாலிவிட்டில் இச்செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் சானியா மிர்சா வேடத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற விவாதங்களும் துவங்கியிருக்கின்றன. அப்பட்டியலில் அலியா பட், பரினிதி சோப்ரா, ராதிகா ஆப்தே, சானியா மல்ஹோத்ரா ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.