விஷாலுடன் நேரடியாக மோதும் விஜய் சேதுபதி... ஜெயிக்கப்போறது சங்கத்தமிழனா?, ஆக்‌ஷனா?... ரசிகர்கள் வெயிட்டிங்...!

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துள்ள  ‘ஆக்‌ஷன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. ஆம்பள, மத கஜ ராஜா படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷால் - சுந்தர் சி கூட்டணி இந்த படத்தில் ஒன்று சேர்ந்துள்ளது. இந்த படத்திற்கு சுந்தர் சி-யின் பேவரைட் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். படத்தில் யோகிபாபு, ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, பழ கருப்பையா, சாயா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான  ‘ஆக்‌ஷன்’ படத்தின் டிரெய்லர் சோசியல் மீடியாவில் சக்கப்போடு போட்டது. துருக்கி, அசர்பைஜான் ஆகிய நாடுகளில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள சண்டை காட்சிகள் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தன. தீபாவளியை முன்னிட்டு வெளியான  ‘ஆக்‌ஷன்’ படத்தின் டிரெய்லரை, யு-டியூப்பில் இதுவரை 38 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். மேலும்  ‘ஆக்‌ஷன்’ காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் தரத்திற்கு வேற லெவலில் உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடினர். 

போஸ்ட் புரோடக்சன் வேலைகள் நடைபெற்று வந்ததால் அடுத்த ஆண்டு தான் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சத்தமே இல்லாமல் விறுவிறுப்பாக படவேலைகளை முடித்துள்ள படக்குழு,  அடுத்த வாரமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. வரும் 15ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது விஷால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், புது சிக்கலுக்கு வழி செய்துள்ளது. அது என்ன சிக்கல் என்றால், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ திரைப்படமும் அன்று தான் வெளியாகிறது. ஏற்கெனவே தீபாவளி ரேஸில் இறங்க இருந்த ‘சங்கத்தமிழன்’, பிகில், கைதி படத்திற்காக பின்வாங்கியது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த ரசிகர்கள் சங்கத்தமிழன் ரிலீஸ் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தனர். இந்த நிலையில் நவம்பர் 15ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ‘சங்கத்தமிழன்’ படம் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இருபடங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் சோசியல் மீடியாவில் செம வைரலானது. சண்டை கோழி விஷால் எப்போதுமே ஆக்‌ஷனில் கலக்குவார் என்றாலும், அவருக்கு போட்டியாக சங்கத்தமிழன் படத்தில் அதிரடி சண்டைகளில் விஜய் சேதுபதி வேற லெவலில் மாஸ் காட்டியுள்ளார்.சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி திரைப்படங்கள் நேருக்கு நேராக மோதியது. இதேபோன்று இந்த முறை விஷாலின் ஆக்‌ஷனும், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழனும் நேரடியாக மோத உள்ளன. இந்த இரு படங்களுக்கும் இடையே நடக்க உள்ள போட்டியில் வெற்றி பெறப் போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.