முதல்முறையாக விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என டபுள் ஹீரோயின்கள் ஜோடி சேர்ந்துள்ளனர். அவர்களுடன், தவிர சூரி, நாசர் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


அரசியல் பின்னணியில் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' படத்தை, மிகப்பெரிய பட்ஜெட்டில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கெனவே சென்சார் ஃபார்மாலிட்டிசை முடித்து, யு சான்றிதழுடன் ரிலீசுக்கு தயாராக இருந்தது சங்கத் தமிழன். 

இந்தப் படத்தின் விநியோக உரிமையை வாங்கிய பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரின் லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனம், உலகம் முழுவதும் 'சங்கத்தமிழனை' ரிலீஸ் செய்வதாக அறிவித்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. 


பின்னர் ஒருவழியாக வரும் நவம்பர் 15ம் தேதி, உலகம் முழுவதும் 'சங்கத்தமிழன்' படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. அதற்கேற்றார்போல், படத்தின் ப்ரமோஷன் பணிகளையும் தயாரிப்பு தரப்பு தீவிரப்படுத்தி வந்தது.

இதனால், 'சங்கத்தமிழன்' படம் நாளை (நவம்பர் 15) ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் படம் நாளை ரிலீசாகாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனைக் கண்டு, விஜய்சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 


இந்த செய்தியை அறிந்து பதறிப்போன லிப்ரா ப்ரொடக்ஷன் நிறுவனம்,  தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இந்த பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் - எந்தவித பிரச்னையும் இன்றி 'சங்கத்தமிழன்' நாளை வெளியாகும் என உறுதிபட தெரிவித்துள்ளது

மற்றொரு பதிவில், நம்பிக்கையோடு காத்திருங்கள் சங்கத்தமிழன் நாளை முதல் உலகமெங்கும் என்றும் அறிவித்துள்ளது. 
எனினும் கடைசி நேரத்தில் 'சங்கத்தமிழன்' ரிலீஸ் தொடர்பாக பரவிவரும் செய்தியால், ஓபனிங் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.