கடந்த சில வருடங்களாக, பிரபலங்கள், மற்றும் விளையாட்டு துறையில் சாதித்தவர்கள் பற்றிய, வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் வெளியான, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு, சச்சின் வாழ்க்கை வரலாறு, போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதே போல் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

எனவே இயக்குனர்கள் பலர், பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க போட்டி போட்டு வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் பிரபலமான, மறைந்த தெலுங்கு நடிகர் உதய் கிரண் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாக கூறப்படுகிறது.

உதய் கிரண், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு, குடும்ப பிரச்சனை மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 

தற்போது இவரது வாழ்க்கை வரலாறு படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் இளம் நடிகர் சந்தீப் கிஷான், உதய் கிரண் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்தியை சந்தீப் கிஷான் அறவே மறுத்துள்ளார். மேலும் இந்த படம் குறித்து தன்னை யாரும் அணுக வில்லை என்றும், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.