ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது நடிகர்களுக்கு,  எதிர்பாராதவிதமாக முகம், கை, கால்களில் சிறிய காயங்கள் முதல் பெரிய அளவிலான காயங்கள் வரை ஏற்படுவது சகஜமான விஷயம் தான்.

மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால் , போன்ற படங்களில் நடித்த சந்திப் கிஷன் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

 ஆக்சன் படமாக எடுக்கப்படும் இந்த படத்தில், கண்ணாடி ஒன்றை உடைக்கும் காட்சியில் சந்தீப் கிஷன் நடித்துள்ளார்.  அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணாடி உடைந்து சிதறியதில்,  அவருடைய முகத்தில், கண்ணுக்கு கீழ் பகுதியில் பலமாக அடிப்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. 

இதனால் பதற்றம் அடைந்த படக்குழுவினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்தனர்.  மேலும் இவருடன் நடித்த ஸ்டண்ட் கலைஞர் ஒருவருக்கும் பலத்த அடிபட்டது.

இந்த விபத்து ஏற்பட காரணம் ஸ்டண்ட் மாஸ்டரின் தவறான வழிநடத்தல் என ஒரு தகவல் பரவியது. இந்த தகவலை மறுத்துள்ளார் நடிகர் சந்தீப். இது குறித்து அவர் கூறுகையில், சண்டைக்காட்சிகளில் இது போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவது சகஜம் தான்.  ஆனால் இதற்காக ஸ்டண்ட் மாஸ்டரை குறை சொல்வது தவறான ஒன்று.  சண்டைக்காட்சிகளில் நடித்தால் இது போன்ற விளைவுகள் இருக்கும் என்பது தனக்கு ஏற்கனவே தெரியும் என்பதை குறிப்பிட்டு கூறியுள்ளார்.