நடிகர் விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்தில் நடித்து வருகிறார். காரைக்குடி  திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங்  மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏற்கெனவே கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த சாமி படத்தின் முதல் பாகத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். இயக்குனர் ஹரி இயக்கி இருந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க திரிஷா முதலில் கமிட் ஆகியிருந்தார். ஆனால், இவருக்கு அதிக முக்கியத்துவம் இல்லாதது போல் கதை இருந்ததால் அவர் இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டதாகக் கூறப்பட்டது. 

தற்போது இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.  நடிகர் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், விக்ரம் தந்தை மகன் என்று இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம்.

இப்படத்தின் வேலைகள் 45 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாமி 2 வருகிற ஜூன் 14ஆம் தேதி அதாவது ரம்ஜான் பண்டிகைக்கு  வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர் படக்குழுவினர். 

மேலும், தமன்னாவுடன் விக்ரம் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் ஸ்கெட்ச் படம் பொங்கலுக்கு வர இருக்கிறது. சாமி2 ரம்ஜானுக்கு வெளிவர இருக்கிறது. ஒருவேளை விக்ரமின் துருவ நட்சத்திரம் தீபாவளிக்கு ரிலீஸானால் சியானின் ரசிகர்களுக்கு ஒவ்வொரு பண்டிகையும் கொண்டாட்டம்தான்.