ஹரியையும் சாமி ஸ்கொயர் படத்தையும் தாறுமாறாக விமர்சித்திருக்கும் முகநூலில் ஒருவர் பதிவிட்ட அந்த விமர்சனம் இதோ.. 

சாமி 2 ஒரு நுண் அரசியலின் உச்சம்... ஆளும் வர்க்கம் எப்போதும் சட்டங்களாலும் ஆயுதங்களாலும் மட்டுமே தன்னை  நிலை நிறுத்திக் கொள்வதில்லை. அது கலை  இலக்கிய பண்பாட்டு செயல்களின் வழியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. கிராம் சியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அது தான் ஆளுவதற்கான ஒப்புதலை, தான் ஆளப்படுவதற்கான ஒப்புதலை வெகு மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது. இவை சாதரண கூற்று அன்று. இதுதான் நுண் அரசியலின் உச்சம். 

இது கமர்சியல் சினிமா என்றோ, மசாலா படம், ஹீரோயிச படம்  அறிவு ஜீவிகளால் விளக்கப்படும் வெகுஜன சினிமா என்று வகைப்படுத்திவிட்டு எளிதாக சென்று விடுவது அபத்தமே. 

சாரம்சத்தில் அத்தனை சினிமாக்களுமே அரசியல் சினிமாக்கள்தான். அவை ஆளுகின்ற அரசியலை பற்றி பேசவிடாத அல்லது அவற்றை பேசாமல் திசை திருப்புகின்ற சினிமாக்கள்; மற்றொரு வகை அரசியலை நேரடியாக பேசுகின்ற சினிமாக்கள் என பேராசிரியர் சதீஸ் பகதூர் கூறுகிறார்

.

சாமி 2 நுண் அரசியல் பேசி வெகுஜன மக்களை திசைதிருப்பும் வேலையாக தெளிவாக செய்துள்ளது. அந்த வகையில், இது முதலில் அரசியல் படம் என்பதை தெளிவுபடுத்து விரும்புகிறேன். நல்ல படங்களை கொண்டாடி தீர்க்கிற அதே வேளையில், தீய சினிமாக்களை  இனம் காட்டுவதும் முக்கியம்னு நினைக்கிறேன்.

படத்தின் முதல் காட்சியே சாதி சண்டையில் கொப்பளிக்கிற கலப்பு திருமண, காதல் பிரச்சனையில் துவங்குகிறது. நாயகன் அத்தனை பேரையும் பந்தாடிவிட்டு வசனத்திற்கு வருகிறார். 

200 வருசத்திற்கு முன்னாடி உங்களையே கோயிலுக்கு விட மாட்டாங்க, இப்ப நீங்க இவுங்கள விட மாட்டிங்களா? உங்களையும் கோயிலுக்குள் விட்டவங்க மாறிட்டாங்க. ஆனால் நீங்க இன்னும் மாறல... மாறுங்கடா? என அந்த வசனம் முடிகிறது. உயர் சாதிக்காரர் உயர்ந்த குணத்துடன் திருந்தி விட்டார்களாம். இடைப்பட்டவர்கள் தான் சாதிவெறி புடுச்சு அலையுறாங்களாம் இப்படித்தான் துவங்குது சாமியின் ஸ்லோகம். அப்புறம் ஒரு காட்சி, சாதியை மறுக்கிற மாதிரி பேசுகிற கதாநாயகன், தன்னோட தாத்தா, உங்க அப்பன் என்ன சாதின்னு தெரியாதுன்னு இழிவுபடுத்தும்போது, அதை சாதரணமாய் கடப்பது எப்படி?

 அப்பன் ஆறுச்சாமி இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடுவதும், மகன் ராம்சாமி மோர் ஊற்றி சாப்பிடுவதும், அவ்விடத்தில் என்ன சாதின்னு கேட்கும்போது இப்ப எல்லாம்  எவன்யா சாதி பாக்குறான்... என்று சொல்லிவிட்டு டான்ஸ் ஆடப் போவது அயோக்ய தனத்தின் உச்ச சாட்சிகள் அந்த காட்சிகள்.காலா படத்தில ரஜினியை வச்சு ரஞ்சத்தின் அரசியலுக்கும் காரணம் உண்டு.  அதுபோலவே கவிதாலயா நிறுவனம். விக்ரம வச்சு  அரசியல் பேசுவதற்கும் காரணம் உண்டுங்க. 

சமீபகால தமிழ் தேசிய அரசியலை கிண்டல் செய்வதில் தொடங்கி கிளைமாக்சில் 10 தலை  ராவண பிச்சை கறுப்புச் சட்டை உடுத்தி, அடி வாங்கி சாவது வரை காக்கி - காவி - கறுப்புக்கும் உண்டான மோதலாக சித்திரிப்பதே ஒரு மசாலா படத்தின் நுண் அரசியலின் உச்சம் தாங்க.

அதிலும் வில்லன் ராவண பிச்சை பேசும் வசனம் ஒன்று "நாங்களெல்லாம் பிறவி கெட்டவங்கடானு சொல்றான்; இது எந்த 
உளவியலின் உச்சம்? ஆக பிறப்பின் அடிப்படையில் தான் குணம் தீர்மானிக்கபடுதுன்னு தெளிவாக சொல்றாள் சாமி 2

இலங்கையில் எவ்வளவோ உயிர்ப்பலி, இன அழிப்பு நடந்த பிறகும் ராவண வம்சம் அரக்கர்களே என்றும் அங்கும் ரவுடித்தனம் செய்யும் ராவண பிச்சையை ஒழுக்க கேட்டின் குறியீடாக்கி, திருநெல்வேலியும் வந்து நான் பத்து தலை ராவணன் தான்னு பேச வைக்கும் சூத்திரம் தான் என்ன? நவீன சூத்திரனை நிறுவத்தானா? 

ஒரு பாடல் காட்சி அதன் பின்னனியில் ஆடுபவர்கள் குறிப்பாய் துப்புரவுத் தொழிலாளிகளாய் துடைப்பத்தோடு ஆடும் அத்தனை பேரின் உடையும் நீலம்...என்ன தான் சொல்ல வர்றீங்க ஹரி?அடுத்து சிலை அரசியல் கிட்டத்தட்ட அண்ணா உருவில் கையை நீட்டியபடி  பெருமாள் பிச்சையின் சிலை. தீமையின் குறியீடாக சித்திரிக்கப்பட்டு தூக்கி எரியப்படுகிறது. 

சாதி கலவரத்தை தூண்ட மாற்றாக மந்திரமூர்த்தி (அதாவது சத்தியமூர்த்தி) உண்மையான தியாகி சிலை சிதைக்கப்படுவதாக வருகிறது. இவர் உண்மையான தியாகி என நாயகனும் வழி வகுக்கிறார், வழிபடுகிறார். 

இது ஹரியின் வசனங்களா? அல்லது ஹரிஹரன்களின் திட்டமா?

 நிஜ ரஜினியன் போலீஸ் பாசம் முழுக்க விக்ரமில் வெளிப்படுகிறது. தேசியத்தில் உருகுவதும் காக்கியை சிறிது கிழித்தவுடன் பூணூல் முதற்கொண்டு தீப்பற்றி எரிவதும் கோபம் கொப்பளிக்க கறுப்புச் சட்டைக்காரன், ராவண பிச்சையை உதைப்பதும் ஒரு கமர்சியல் படத்தில் எப்படி இத்தனை அரசியல்?

உச்சபட்சமாய் ஜனாதிபதி (ரப்பர் ஸ்டாம் பின்) அதிகாரம் பெரிதென்று நாயகன் பிதற்றுவதும், ஸ்டேட்டில் கவர்னர்தான் பெரிய பிஸ்தா எனக் காட்டி நாயகனை டிரான்ஸ்பர் ஆக தடுப்பதும் அட அட ஆட்டின் தாடி தான் நிகழ்கால தமிழக அரசியலை தீர்மானிககிறது என்பதை அழகா அழகா சொல்றா இந்த சாமி.

காமெடியிலும் சூரியை வைத்து பார்ப்பன மொழிகள் முற்போக்கு முகமூடி போட்டு நிற்கின்றன. அவாள் என்பதும் அவன் என்பதும் எனத் தொடங்கி நுண் அரசியல் வாய்விட்டு சிரிக்க அல்ல அது மூளை விட்டு சிந்திக்க வேண்டிய காட்சிகள் அவை? ஜெய் ஹிந்த் சொல்லும் காமெடியிலும் அரசியலே. 

நேரடி அரசியல் பேசிய காலங்கள், வரும் காலகட்டத்தில் வெகுஜன மயக்கம் தந்து மசால பட வடிவில் சாமி 2க்களும் வரும் என்பது புரியாவிடில் ஈ.வெ.ராமசாமியின் அரசியல் நசுங்கும். ராம் ஸ்வாமிகளின் அரசியல் வெல்லும் என்பது திண்ணம். சினிமா கலாரசிகர்களே மற்றபடி திரைப்படத்தில் சத்தம் இல்லாமல் எதுவும் இல்லை. எடிட்டிங்கின் பரபரப்பு வழக்கமான லாஜிக் அற்ற மோதல்கள். 

பெண்மையை இழிவுபடுத்தி அரையும் பிற்போக்குகள். அந்த நாயகனையே காதலிக்கும் வழக்கமான காதல் வழுக்கல்கள்.. இசைவற்ற குத்துப்பாடல்கள். ஹீரோயிச மனநோயை பரப்பும் உடல் மொழிகள் என எல்லாமே வணிக பேராசையின் உச்சமும் நுண் அரசியலின் மிச்சமுமாக ஊசிப்போன தயிர்சாதத்தை, வெள்ளை அல்வா என கிண்டி கொடுக்கிறார்கள்.

தியேட்டரில் வழக்கம்போல் சிந்தனை மலடுகள் வாய் பிளந்து விசில் அடிக்கின்றன... இளிக்கின்றன. சிந்திப்போர்க்கு பகுத்தறிவு மூளை விழிக்கின்றன.. சுருங்கச்சொல்ல வேண்டுமானால் H.ராஜாவுக்கு IPS அதிகாரம் கொடுத்தால் என்னவெல்லாம் பேசுவாரோ... எதையெல்லாம் செய்வாரோ... அதையெல்லாம் விக்ரம் செய்துள்ளார் அவ்வளவே.

இனி கழுத்துல சுடமாட்டேன் மண்டையில சுடுவேன் என்பதும் கோர்ட்டாவது மயிராவது என்பது மாதிரி மனுசனாவது மயிராவது என திரையில் வில்லன் பேசுகிறான்.

 நிஜத்துல வில்லன் யாரு? கதாநாயன் யாரு? என்று நான் சொல்ல தேவையில்ல.  அது நாட்டுக்கே தெரியும். மொத்தத்தில் ராம் சாமிகளுக்குள் சுப்ரமணிய சுவாமிகள் இருக்கலாம். ஜாக்கிரதை சினிமா பக்தர்களே... இவ்வாறான அந்த  விமர்சனம் ஹரியின் மொத்த எண்ணத்தையும் தோலுரித்து காட்டி இருக்கின்றன.