நயன் காதலர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம். இந்த படத்தில்  விஜய்சேதுபதி, நயன்தாரா, மற்றும் சமந்தா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின், ஷூட்டிங் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கில் முதல் நாள் அன்று கலந்துகொண்ட, சமந்தாவிற்கு போக்கே கொடுத்து விக்னேஷ் சிவன் வரவேற்றபோது, சமந்தா அவரை கலாய்க்கும் வீடியோவை விக்கி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் ’சமந்தா முதல் நாள் படப்பிடிப்புக்கு தயாராக மேக்கப் போட்டு கொண்டிருக்கும் போது, 'காத்து வாக்குல ரெண்டு காதல்' இனிய ஆரம்பம் என சிரித்து கொண்டே கூறுகிறார், பின்னர்  இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து சமந்தாவை வரவேற்கிறார். அப்போது சமந்தா ’ஒழுங்கா படம் எடுப்பீர்களா’ என்று விக்னேஷ் சிவனை கலாய்த்தார். அதற்கு சிரித்துக்கொண்டே விக்னேஷ் சிவன், 'தெரியலை பார்ப்போம்’ என்று கூறிவிட்டு, ‘இன்னும் பத்து நிமிடத்தில் ரெடி ஆகாது பொறுமையா வாங்க’ என்று பதிலுக்கு கலாய்த்து விட்டு செல்கிறார்.

தற்போது நயன்தாராவும், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் 'அண்ணாத்த' படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடந்து வருவதால், ஓய்வு கிடைக்கும் போது காதலரின் இயக்கத்தில் உருவாகும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.