திருமணத்துக்குப் பின் தனது கணவர் நாக சைதன்யாவுடன் சமந்தா இணைந்து நடித்திருக்கும் ‘மஜிலி’ படத்தின் ட்ரெயிலர் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸாகவிருப்பதை அப்படக்குழு உற்சாகமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் காதல் வாழ்க்கையை திருமணத்துப்பின்னரும் கசந்துபோகாமல் பார்த்துக்கொள்வது எப்படி என்று காதலர் தின ஸ்பெஷல் டிப்ஸ் கொடுக்கிறார் சமந்தா “தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என எனக்குத் தெரியும். சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி, குடும்ப வாழ்வுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த விஷயத்தில் நான் மிக மிக கவனத்துடன் இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கத்தான் நாம் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். நாம் வீட்டுக்குள் நுழைந்தால் மகிழ்ச்சியான சூழல் இருக்க வேண்டும். நானும் என் கணவர் நாக சைதன்யாவும் ஒரே துறையில் இருக்கிறோம். என் கணவரின் மொத்த குடும்பமுமே ஏதோ ஒரு வகையில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆனாலும் வீட்டில் சினிமா பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டோம்.

எங்கள் சினிமா சிந்தனை எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும்தான்.  ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஷிஃப்ட் ஆகிவிட்டால் கணவன் மனைவியாக மாறி எங்களது சொந்த வாழ்வைப் பற்றி மட்டுமே நாங்கள் சிந்திப்போம். சினிமா விவகாரங்களை வீட்டு வாசற்படிக்கு வெளியிலேயே விட்டுவிடுவோம். அதனால்தான் எங்களுக்குத் தேவையான நேரத்தை நாங்கள் ஒதுக்க முடிகிறது. இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறோம். ஆனால், வீட்டுக்குள் வந்து படத்தைப் பற்றி பேச மாட்டோம். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் மட்டுமே படத்தைப் பற்றி பேசுவோம்” என்று திருமணமாகி மூன்று வருடங்களான பிறகும் தனது காதல் கசக்காததன் ரகசியத்தைச் சொல்கிறார் சமந்தா.