எப்போதும் செல் போன்களுடன் சுற்றும் இந்த காலத்து இளசுகள் முதல் பெரியவர்கள் வரை, திரையரங்கம் சென்று படம் பார்க்க வேண்டும் என்றால், அந்த படத்தை பற்றி விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்ட பின்பு தான் படத்தை பார்க்கலாமா? வேண்டாமா? என முடிவு செய்கின்றனர். 

அதிலும், குறிப்பிட்ட ஊடகங்களின் விமர்சனம் கூறும் சிலருக்கு தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் வாரம் தோறும் வெளியாகும் படங்கள் பற்றி கூறும் விமர்சனங்களை ரசிகர்கள் பார்க்க மறப்பதில்லை.

அந்த வகையில் பிரபல ஊடகம் ஒன்றில், எப்போதும் நீல நிற உடை அணிந்து, எதார்த்தமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் கூறுபவர் 'ப்ளூ சட்டை மாறன்'. நல்ல படங்கள் பற்றி கூட இவர் தவறாக விமர்சித்துள்ளார்.  என ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபு தேவா நடித்து, 2002 ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டாக அமைந்த 'சார்லி சாப்ளின்' படத்தின் இரண்டாம் பாகம் 17 வருடங்களுக்கு பின் எடுக்கப்பட்டது. இந்த படத்திலும் பிரபு தேவா தான் கதாநாயகனாக நடித்திருந்தார். 

'சார்லி சாப்ளின் 2 ' என்கிற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான இந்த படம் குறித்த மிகவும் மோசமான வகையில் 'ப்ளூ சட்டை மாறன் " விமர்சித்துள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்த அவர் கொடுத்துள்ள புகாரில் "ப்ளூ சட்டை மாறன் இப்படி விமர்சிப்பதற்கு காரணம்  'சார்லி சாப்ளின் 2' படத்தை, நல்லவிதமாக விமர்சனம் செய்ய  அவர் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் கேட்ட தொகையை கொடுக்காததால் இப்படி மோசமாக விமர்சனம் கூறியுள்ளார் என இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தன்னுடைய புகாரில் கூறியுள்ளார்.  விரைவில் இந்த புகார் மீது விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில வருடங்களாக,  ஆன்லைன் விமர்சகர்கள் சிலர், படங்கள் பற்றி சரியான தகவலை கொடுக்காமல் உள்ளதால், வசூல் பாதிக்கப்படுவதாக புகார் கூறி வரும் நிலையில் சக்தி சிதம்பரம் குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் பணம் கேட்டு மிரட்டியதாக கூறியுள்ளது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.