’இது நான் இருக்கவேண்டிய இடம் அல்ல. இந்த இடத்திற்கு தவறுத’ என்று தனது 5 ஆண்டுகால சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு  திரையுலகிருந்து  விலகுவதாக நடிகை சைரா வாசிம் அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் அறிவிப்பு பாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை சைரா வாசிம்.  ஆமிர்கானின் ‘தங்கல்’ படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்த இவர் தனது முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினரின் பாராட்டைப்  பெற்றார். மேலும் ’தங்கல்’  படத்திற்காகச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய  விருதையும் பெற்றார். அடுத்து மிகவும் செலக்டிவாக மட்டுமே படங்கள் தேர்வு செய்த அவர், ‘த சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’,’த பிங்க் ஸ்கை’ ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்தார்.

இந்நிலையில், சைரா நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் எடுத்த முடிவால் வாழ்க்கை மாறிவிட்டது.  தான் செய்யும் வேலை மகிழ்ச்சி அளிக்கவில்லை. இந்த வேலை  எனது இறை நம்பிக்கைக்கு இடையூறாக இருந்து வந்தது. எனது மதத்திற்கும் எனக்குமான உறவை இந்த துறை கெடுத்துவிடுமோ என்ற  பயம் எனக்குள் ஏற்பட்டது. எனவே இனி சினிமாவில்  என்னுடைய பயணத்தை தொடர முடியாது. சினிமா என்னுடைய மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரானதாக இருப்பதால் இந்த முடிவை நான் எடுக்கிறேன். நான் திரையுலகிலிருந்து விலகுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதுதான் 18 வயதை எட்டியுள்ள ஷைரா வாசிமின் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மிகவும் செலக்டிவ்வாக இருந்து வருடத்துக்கு ஒரு படமாவது நடித்துக்கொண்டிருக்கவேண்டும் என்று பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.