'லவ் ஸ்டோரி' படத்தை தொடர்ந்து மீண்டும் சமந்தா முன்னாள் கணவருக்கு ஜோடியான சாய் பல்லவி!
கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகிவரும் NC23 படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.

நாக சைதன்யா நடிப்பில், சந்து மொண்டேடி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்கும், இன்னும் பெயரிடாத படம், தற்போது NC23 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவர, நடிகை சாய் பல்லவி இப்படத்தில் இணைந்துள்ளார்.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பே ப்ரீ புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கிய படக்குழு, விரைவில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதால், இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பன்னி வாசு இப்படத்தை தயாரிக்கிறார், அல்லு அரவிந்த் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல வெற்றிகரமான படைப்புக்களை உருவாக்கிய முன்னணி தயாரிப்பு நிறூவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் பெருமையுடன் வழங்குகிறார்.
இந்நிலையில் சாய் பல்லவி இப்படத்தில் இணைந்த புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படமாக இப்படம் உருவாக உள்ளது. எனவே சினிமாத்தனம் இல்லாத கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவி, மிகவும் எதார்த்தமான கதாநாயகியாக இந்த படத்திலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இதற்கு முன்பு சூப்பர்ஹிட் லவ் ஸ்டோரி படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உருவாகவுள்ள NC23 படத்தின் மூலம் தங்களின் அழகான கெமிஸ்ட்ரி மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
NC23 நாக சைதன்யா மற்றும் சந்து மொண்டேடி இணையும் இப்படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் உயர் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது.