நடிகை சபர்ணா விவகாரம் : பிரேத பரிசோதனையில் தற்கொலை என தகவல்!
சென்னையில் துணை நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சீரியல் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்வது மற்றும் தற்கொலைக்கு முயற்சிப்பது அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த வரிசையில் சீரியல் மற்றும் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்த சபர்ணா திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மதுரவாயல் சேமாத்தம்மன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனியாக வசித்து வந்த நடிகை சபர்ணா, கடந்த வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மூன்று நாட்களாக அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. சபர்ணாவின் வீடு உள் பக்கமோ, வெளிப்பக்கமோ பூட்டப்படாமலேயே இருந்தது. அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை செய்த பிறகு சபர்ணாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தன்னுடைய மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை காவல்துறையிடம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் சபர்ணா தற்கொலை செய்து கொண்டுள்ளது உறுதியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சபர்ணாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
