இன்னும் மிச்சமிருக்கிற காலத்தில் ரஜினி எத்தனை இயக்குநர்களுக்குத்தான் கால்ஷீட் தரமுடியுமோ தெரியவில்லை. தற்போது தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியும் ரஜினியை வைத்து படம் இயக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தெலுங்கில் ’பாகுபலி 2’ வரை இதுவரை தொடர்ந்து 11 வெற்றிப்படங்களை இயக்கியுள்ள ராஜமவுலியின் இயக்கத்தில் ‘பாகுபலி’ முதல் பாகம் வெளியானபோதே ரஜினி நடிக்க மிக ஆர்வமாக இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் சூட்டோடு சூடாக ‘பாகுபலி 2’வை இயக்கவேண்டியிருந்ததால் அந்த வாய்ப்பை சர்வ சாதாரணமாக நிராகரித்தார். ரஜினி ஒரு இயக்குநரைத் தேடிப்போய் வாய்ப்புக் கேட்டு நிராகரிக்கப்பட்டது அப்போது பரபரப்பான செய்தியாக இருந்தது.

தற்போது மிகப்பிரம்மாண்டமாக ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணை வைத்து இயக்கத்துவங்கியுள்ள ராஜமவுலி, இரு தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது ரஜினியை வைத்து படம் இயக்கும் எண்ணம் தனக்கு உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய அளவில் பிரபல இயக்குநராக இருந்தாலும் இதுவரை ராஜமவுலி தனது தாய்மொழியான தெலுங்கு தவிர வேறு எந்த மொழியிலும் படம் இயக்கவில்லை. இந்நிலையில் அந்நிகழ்ச்சியில், தமிழில் படம் இயக்கினால் உங்கள் சாய்ஸ் கமலா ரஜினியா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமவுலி ‘கண்டிப்பாக எனது சாய்ஸ் ரஜினிதான். எங்கள் காம்பினேஷனில் ஒரு படம் தயாரானால் அது ஒவ்வொரு சீனிலும் தியேட்டரில் விசில் பறக்கும் படமாக இருக்கும்’என்று பதிலளித்தார்.