சென்னைக்கு இணையான வெயில் ஹைதராபாத்திலும் வாட்டி வதைக்கும் நிலையில் சிரஞ்சீவியின் ’ஷை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் கடும் வெப்பம் காரணமாக ஹைதராபாத்தில் திடீரென்று மரணமடைந்துள்ளார். 

தெலுங்கில், சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு ஷை ரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில், சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், சுதீப், தமன்னா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். பிரிடிஷ் காலத்து வரலாற்றுப் படம் என்பதால் இவர்களுடன் இணைந்து வெளிநாட்டு நடிகர்களும் நடித்து வருகின்றனர். அதில், ஒருவர் தான் அலெக்சாண்டர் (38). இவர், ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு வந்த அலெக்சாண்டர் போரேஸூடன் கோவாவில் தங்கினார். 

பின்னர், மும்பை சென்ற அவர் ஷரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக  ஷூட்டிங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஏஜெண்ட் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட அவர், பிரிட்டிஷ்காரர்களில் ஒருவராக நடித்தார். ஹைதராபாத், கடப்பா ஆகிய பகுதிகளில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட அலெக்சாண்டர், சில நாட்களாக ஹைதராபாத்திலேயே இருந்துள்ளார். 

இந்த நிலையில், ஹைதராபாத்தில் தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அங்குள்ள சைபர் சிட்டி அருகில் மயங்கிய நிலையில், கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த அலெக்ஸாண்டர் சில இந்திப்படங்களிலும் சின்னச்சின்ன பாத்திரங்களில் நடித்துவந்தவர் ஆவார்.