நடிகர் விஜய், ஏஜிஎஸ் சினிமாஸ், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். பிகில் பட வருமான விவகாரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

நடிகர் விஜய்க்கு சொந்தமான சாலிகிராமம், நீலாங்கரை, பனையூர் வீடுகளில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று இரவு முதல் நடிகர் விஜய்யிடம் ஐ.டி. அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேபோல் 2003ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரனின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு,அலுவலகங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே தியாகராய நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 50 கோடி ரூபாயையும், மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையில் 15 கோடி ரூபாயும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.