படப்பிடிப்பு தளத்துக்குள் குடிபோதையில் புகுந்த ரவுடி கும்பல், அங்கிருந்த நடிகர் நடிகைகளை மரக்கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கியது. இதில் ஒளிப்பதிவாளர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பிரபல நடிகை மாஹி கில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

‘தேவ் டி’, சாஹேப் பீவி அவுர் கேங்ஸ்டர்’ போன்ற இந்தி திரைப்படங்களில் நடித்தவர் மாஹி கில். தற்போது இவர் ‘பிக்சர்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். ஏக்தா கபூரின் பாலாஜி டெலி கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் சார்பில் சாகேத் சாவ்னே இந்த வெப் தொடரை தயாரித்து வருகிறார். சோஹம் ஷா படத்தை இயக்கி வருகிறார். மாஹில் கில்லுடன் நடிகர் திக்மான்ஷூ தூலியா நடிக்கிறார். நேற்று முன்தினம், மகாராஷ்டிராவின் மீரா ரோடு பகுதியில் கோட்பந்தர் சாலையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இந்த தொடருக்கான கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. மாலை 4.30 மணிளவில் இந்த படப்பிடிப்பு தளத்துக்குள் ரவுடிகள் நான்கைந்து பேர் மரக்கட்டைகளுடன் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த பெண் கலைஞர்கள், உதவியாளர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. படப்பிடிப்பு நடைபெறும் இடம் தங்களுக்கு சொந்தமானது என்றும் இங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்றும் அந்த ரவுடிகள் இயக்குனரையும் மற்றவர்களையும் மிரட்டியவாறு மரக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். இதில் ஒளிப்பதிவாள்ர சந்தோஷ் துடியாலின் மண்டை உடைந்தது.

நடிகை மாஹி கில்லையும் அவர்கள் தாக்க முயன்றனர். ஆனால், அவர் படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேனிட்டி வேனில் ஏறி  கதவை பூட்டிக் கொண்டார். எனினும் ரவுடிக் கும்பல் அந்த வேனை அடித்து நொறுக்கியது. இதுபற்றி தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும் ரவுடிக் கும்பலுக்கு சாதகமாவே நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. உரியவர்களிடம் அனுமதி பெறாமல் இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக போலீசார் குற்றம்சாட்டினர்.

நடிகை மாஹி கில் கூறுகையில், ‘‘போதையில் வந்த ரவுடிக் கும்பல், பெண்களையும் விட்டு வைக்காமல் தாக்கினர். அவர்கள் என்னையும் தாக்க முயற்சித்தனர். ஆனால், நான் வேனில் ஏறி தப்பிவிட்டேன். எனினும் அந்த வேனை ரவுடிக் கும்பல் அடித்து நொறுக்கியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும் ரவுடிக் கும்பலுக்கு சாதகமாகத்தான் நடந்து கொண்டனர். இதனால், போலீசிடம் புகார் அளித்து பலனில்லை என்பதை புரிந்து கொண்ட நாங்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து முதல்வர் தேவேந்திர பட்நவிசை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம்’’ என்றார். இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு வந்து ரவுடிக் கும்பலுக்கு சாதகமாக பேசிய போலீசார் படப்பிடிப்பில் இருந்தவர்களை மிரட்டி ரூ.50 ஆயிரம் வாங்கிச் சென்றதாக படப்பிடிப்புக் குழுவினர் குற்றம்சாட்டினர்.