கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக புதிய பட வாய்ப்புகளே இல்லாமல் வீட்டிலும் அலுவலகத்திலும் முடங்கிக் கிடக்கும் நடிகர் வடிவேலு, மக்கள் தன்னை மறந்துவிடக் கூடாதே என்கிற அச்சத்தில், அடிக்கடி தன்னைப் பற்றி தொடர்ந்து வதந்திகள் கிளப்பி வருகிறார். 

‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ தொடர்பாக ஏற்பட்ட பஞ்சாயத்தில் மூன்று வருடங்களாக வடிவேலு படங்கள் இன்றித் தவிக்கும் கதை பேசித் தீர்த்த கதை. இந்த இடைப்பட்ட காலத்தில் இதோ முடிவுக்கு வந்தது வடிவேலு பிரச்சினை என்று எத்தனையோ முறை செய்திகள் வந்தாலும் வடிவேலுவுக்குப் புதிய படங்கள் ஒப்பந்தமாகவேயில்லை. அதனால் வெறுத்துப்போன வடிவேலு துவக்கத்தில் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துடன் சமாதானமாகிவிட்டதாக ஒரு வதந்தி கிளப்பினார். அது ஒர்க் அவுட் ஆகாத நிலையில் ‘தேவர் மகன் 2’வைத் துவக்கவிருக்கும் கமல், ‘வடிவேலு இல்லாம அந்தப் படத்தை எடுக்க முடியாது. அதனால உடனே அவருக்கு பெரிய அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணுங்க’என்று சொன்னதாக ஒரு வதந்தி இன்னும் சிறப்பாகப் பரவியது.

ஆனால் ‘இந்தியன் 2’முடிந்து, ’தலைவன் இருக்கிறான்’முடிந்து கமல் எப்ப ’தேவர் மகன் 2’ எடுக்குறது என்று அந்த செய்தியும் சூடு ஆறிவிடவே, புதிதாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த அஜீத் படத்தில் வடிவேலு இணையவிருப்பதாக ஒரு மூன்றாவது வதந்தி கடந்த இரு தினங்களாக நடமாடத் துவங்கியுள்ளது. எழில் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘ராஜா’படத்தில்தான் வடிவேலுவும் அஜீத்தும் இணைந்து நடித்தனர். அப்பட ஷூட்டிங்கின்போது குழுவினர் முன்னிலையில் ‘வாடா போடா மச்சான்’ என்று தன்னை வடிவேலு அழைத்ததால் அத்துடன் அவரைத் துண்டித்துக்கொண்டார் அஜீத். 17 வருடங்கள் அல்ல இனியொரு 17 வருடங்களுக்குப் பின்னரும் வடிவேலுவுடன் சேர்ந்த் அஜீத் நடிக்கமாட்டார் என்பதே நிதர்சனம்.