’பத்திரிகையாளர் காட்சியில் படம் பார்க்க வருவதற்கே பயமாக இருக்கிறது. நல்ல நகைச்சுவைப் படங்களுக்குக் கூட சிரிக்காமல் உம்மென்று படம் பார்த்து நோகடிக்கிறார்கள்’என்று நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே பேசி சர்ச்சையை உண்டாக்கினார்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடைபெற்றது. சுமார் 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்துகொண்ட அவ்விழாவில் கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் ரோபோ பத்திரிகையாளர்களுக்கும் ரசிகர்களுக்குமான வித்தியாசம் கூட தெரியாமல் பேசி விழாக் குழுவினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,’ பிரஸ் ஷோ போடுறப்ப பத்திரிகையாளர்கள் நல்ல காட்சிகளைக் கூட ரசித்துக் கைதட்டாமல் படம் பார்க்கிறார்கள். ஆனால் தியேட்டரில் விசில் அடித்துப் படம் பார்க்கிறார்கள்’என்றார். இதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பவே ‘அவங்க ரசிகர்கள் கிடையாதுண்ணே. வாரத்துக்கு அஞ்சாறு படம் பாக்குறதுனால பாவம்ணே அவங்க’ என்று வக்காலத்து வாங்கி அனைவரையும் சாந்தப்படுத்தினார்.