‘பிகில்’படத்தில் நடித்த காமெடி நடிகரின் மகள் இந்திரஜாவை ’குண்டம்மா குண்டம்மா’ என்று விஜய்  உசுப்பேத்திய காட்சிக்கு வலதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் அக்காட்சியில் நடிக்க விஜய் தயங்கியதையும் அதற்காக தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிகில் படத்தில் தனது தந்தையைப் போல மிகவும் நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. மேலும், படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற, ’எங்க அம்மாவும் குண்டு எங்க அப்பாவும்குண்டு எங்க நான் மட்டும் எப்படி இருப்பேன்’ என்று ரோபோ சங்கர் மகள் பேசிய வசனங்கள் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் ரோபோ ஷங்கரின் மகளைப் பார்த்து, நீ தின்னுவதற்கு மட்டும் தான் லாயக்கு. குண்டம்மா, குண்டம்மா என்று கூறுவது போல ஒரு வசனம் இடம் பெற்று இருந்தது. 

இக்காட்சிக்கு மிகவும் தாமதமாக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. விஜய் போன்ற ஒரு முன்னணி நடிகர் உருவ கேலி செய்வதை ஆதரிக்கலாமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதுபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது தாயாருடன் இணைந்து பேட்டி அளித்த இந்திரஜா,’ஆக்சுவலா குண்டம்மா என்று என்னைக் கிண்டலடிக்க அவ்வளவு தயங்கினார் விஜய். அந்த வசனம் அந்தக் காட்சிக்கு மிகவும் தேவையானது என்பதால் நான் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் சந்தோஷமாகத்தான் நடித்தேன். அந்த காட்சி எடுத்து முடிக்கப்பட்ட பிறகு கூட என்னிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டார் விஜய் சார்’என்று அப்பேட்டியில் கூறியுள்ளார் இந்திரஜா.