பிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ் நேற்று அவருடைய சொந்த ஊரான ராமநாதபுரத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். 

சிறந்த அரசியல்வாதியாகவும், திரைப்பட நடிகராகவும் அனைவராலும் அறியப்பட்ட ஜே.கே.ரித்தீஷ், பிரபல காமெடி நடிகர் சின்னிஜெயந்த் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர்.  

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்து,  தற்போதைய அரசியல் நிலையை காமெடியாக எடுத்து கூறும் விதமாக எடுக்கப்பட்ட, எல்.கே.ஜி படத்தில், மக்களுக்கு நல்லதை செய்ய போராடும் "ராம்ராஜ் பாண்டியன்' என்கிற அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் ரித்தீஷ். 

இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் அரசியல் வேலைகளில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் எல்.கே.ஜி படத்தில் ரித்தீஷுடன் சேர்ந்து நடித்த,  நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, இவரின் திடீர் மரணம் குறித்து மிகவும் உருக்கமான ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்... "நான் உங்களை இழந்துவிட்டேன்.  நீங்கள் என்னை சொந்த சகோதரர் போன்றுதான் நடத்தினீர்கள்.  எல்.கே.ஜி படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட நீங்கள் சம்பளமாக பெறவில்லை. உங்களை மிகவும் நேசிக்கிறேன்.  நீங்கள் சிறந்த மனிதர்,  அதனால் தான் என்னவோ மூன்று குழந்தைகள் உள்ள அழகான குடும்பம் இருந்தும் கடவுள் உங்களை இரக்கமில்லாமல் எடுத்துக்கொண்டார்.  இதனை கொடூரத்தனமாக உணர்கிறேன். என ட்விட் போட்டுள்ளார்.

 

மேலும் இவரின் மரணம் ஒரு கனவாக இருந்து விட கூடாதா... என ரசிகர்களும்,  தொண்டர்களும் தங்களுடைய வருத்தத்தையும், ஆதங்கத்தையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.