96 போல இந்த படமும் வெற்றி பெறும்.. ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஜோ’ படத்துக்கு குவியும் பாராட்டு!
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடந்தது.
இதில் பேசிய விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பாளர் டி. அருள் நந்து, “15 வருடங்களாக சினிமா செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கனவு. அதை 2023 செய்யக் காரணம் ஏகன்தான். அவர் எங்களிடம் வந்து ரியோவிடம் ஒரு கதையுள்ளது அதை செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். ரியோ கதை சொன்னது மிகவும் பிடித்திருந்தது. உடனே படம் பண்ணலாம் என முடிவெடுத்து விட்டோம். படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். படத்தை நான் இதுவரை 8 முறை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும் புதிதாக உள்ளது. படம் மிகப் பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையுள்ளது” என்றார்.
தயாரிப்பாளர் மேத்யூ பேசும்போது, “படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்றால் படம் பார்க்கக் கூடியவர்களுக்கு ஏதேனும் ஐந்து, பத்து நிமிடங்கள் தங்களுடன் கனெக்ட் செய்து கொள்ளும்படியான மொமெண்ட் நிச்சயம் இருக்கும். முதல் பாதி முழுவதுமே எனக்கு அப்படித்தான் இருந்தது. எல்லாருமே கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்” என்றார். பாடகர் ஆண்டனி தாசன் பேசும்போது, “ரியோவுக்காக இரண்டாவது முறை பாடியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களைப் போலவே நானும் இந்தப் பாடலைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்.
இந்த வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் சித்துகுமாருக்கும், பாடலாசிரியர் கிரண் வரதனுக்கும் நன்றி. ரசிகர்களுக்கும் பாடல் நிச்சயம் பிடிக்கும்” என்றார். இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது “இந்தப் படத்தில் உள்ள கலைஞர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் நடித்த ரியோ, இயக்குநர் ஹரிஹரன் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை. தயாரிப்பாளர் அருள் நந்து மட்டுமே எனக்கு தெரியும். அவர்தான் இந்தப் படத்தை என்னை் பார்க்கச் சொல்லி சொன்னார். படம் பார்த்த பின்பு படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சாட்சியாக நானும் வந்திருக்கிறேன். அவ்வளவு அருமையான படம் இது. படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது.
இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம். சமீபத்தில், மனநிறைவோடு நான் பார்த்த படம் ‘ஜோ’. இளைஞர்களே நம்பி படம் எடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்கிறேன். ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது, வாழ வைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்தப் படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில்கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும்போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்” என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நடிகர் தீனா பேசும்போது, “ரியா அண்ணாவின் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ அவருடன் எனக்குப் பழக்கம். அவர் கூப்பிடவில்லை என்றாலும் இந்த நிகழ்வுக்கு நானே வருவேன். இந்த படத்தில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன்” என்றார். நடிகர் புகழ் பேசும்போது, “படத்தில் நடித்தோமோ போனோமோ என்றில்லாமல் உங்கள் பட நிகழ்வுக்கு நீங்களே ஹோஸ்ட் செய்து கொண்டிருப்பது பெரிய விஷயம். உன்னுடைய உழைப்புக்கு நிச்சயம் இந்த படம் மிகப் பெரிய இடத்தை போய் சேரும்” என்றார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது, “ஒரு படம் பார்ப்பது என்பது ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அருள் நந்து அண்ணன் என்னிடம் சொன்னார். ‘ஜோ’ படத்திற்காக கதாநாயகன் ரியோவில் இருந்து அனைவருமே கடுமையாக மூன்று வருடம் உழைத்துள்ளனர். டிசம்பர் 24 தான் வெளியிட வேண்டும் என அவ்வளவு ஆசையோடு கேட்டார். பிடித்தவர்களுக்காக திருப்தியாக நான் செய்து கொடுக்கும் படம் இது” என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப் படத்தின் டிரைய்லரை அருள் நந்து போட்டு காண்பித்தபோது நன்றாக இருக்கிறது எனது தோன்றியது. புரமோஷன் பாடலுக்காக யுவன் வந்தபோது படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. தான் கமிட் செய்த புராஜெக்ட்டை மிகவும் விரும்பி, முழு அர்ப்பணிப்பு கொடுத்து அருள் நந்து செய்துள்ளார். அதற்காகவே இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். ‘ஜோ’ படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் உங்களை நெகிழ வைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
ஃபைனான்சியர் அன்புச்செழியன் பேசும்போது, “படத்தில் எல்லாருமே சிறப்பாக நடித்துள்ளனர். முதல் பாதி ஜாலியாகவும் இரண்டாம் பாதி எமோஷனலாகவும் போனது. ’96’ போல படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்” என்றார். நடிகை மாளவிகா பேசும்போது, “நான் ஒரு மலையாளி. இந்தப் படத்தில் என்னை நம்பி மிக முக்கியமான வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் ஹரி இவர்களுக்கு நன்றி. படத்தின் கதை மிகவும் பிடித்து செய்தேன். ரியோ சீனியராக இருந்தாலும் எங்களை மிகவும் நன்றாக நடத்தினார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
நடிகை பவ்யா பேசும்போது, “தயாரிப்பாளர், இயக்குநர், ரியோ என எல்லாருக்குமே நன்றி. நாங்கள் அனைவரும் முழு மனதை கொடுத்துதான் இந்த படத்தில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படத்தில் பணிபுரிந்த எல்லாருமே இப்போது எனக்கு பெஸ்ட் நண்பர்கள். இந்தப் படத்தில் எண்டர்டெயின்மெண்ட், ஆக்ஷன், எமோஷன், லவ் என எல்லாமே இருக்கும். ஒரு உண்மையான காதலை உணர வேண்டும் என்றால் கண்டிப்பாக ‘ஜோ’ படத்தை நீங்கள் பாருங்கள்” என்றார்.
இயக்குநர் ஹரிஹரன் பேசும்போது, “இந்தப் படத்தின் நிகழ்விற்கு வந்து பெரிய வார்த்தைகள் சொன்ன சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. நான் இயக்குநராக இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. 2015 வாக்கில் இந்த கதையை ரியோ அண்ணனிடம் சொன்னேன். விடிய விடிய படத்தின் கதையை கேட்டுவிட்டு நிச்சயம் இதை நான் செய்கிறோம் என்று சொன்னார். அன்றிலிருந்து இன்றுவரை இந்த படத்தை தூக்கி சுமந்து கொண்டு உள்ளார்" என்று கூறினார்.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..