பிரபல ஆபாச பட நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு, இந்தி மொழியில் படமாக தயாராகி வருகிறது. அவரது வேடத்தில் ரிச்சா சதா நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில், ஏராளமான ஆபாச படங்களில் நடித்தவர் ஷகீலா. குறிப்பாக, மலையாளத்தில் அவருக்கு பெரும் டிமாண்ட் இருந்தது. இதனால், மோகன்லாக், மம்மூட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களைவிட, ஷகீலாவின் படங்கள் அதிக வசூல் ஈட்டி சாதனை படைத்தன. 
 
வயதான காரணத்தால், படிப்படியாக ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய ஷகீலா, தற்போது பொதுவான சினிமா படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்று பற்றி புத்தகமும் எழுதியுள்ளார். அதில், வறுமை காரணமாகவே இத்தகைய தொழிலுக்கு தள்ளப்பட்டதாக, ஷகீலா குறிப்பிட்டும் உள்ளார். இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாறு இந்தி மொழியில் படமாக தயாராகிறது. இந்திரஜித் லங்கேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஷகீலா வேடத்தில், கேரளாவை சேர்ந்த ரிச்சா சதா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ராஜீவ் பிள்ளை நடிக்கிறார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் உள்ள தீர்த்தஹள்ளி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இதுபற்றி ரிச்சா சதா கூறுகையில், ஷகீலாவின் வேடத்தில் நடிப்பது மிகப்பெரிய விசயம். இளமைக்காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு நடிக்க வந்த ஷகீலா சந்தர்ப்பம் காரணமாக ஆபாச படங்களில் நடிக்க தொடங்கினார். அதை உள்ளபடியே படமாக எடுத்து வருகிறோம். தற்போது ஷகீலா படங்களில் நடிக்காவிட்டாலும், அவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால், அவரைப் போல நடிப்பதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளேன்,’’ எனக் குறிப்பிட்டார்.
 
இதேபோல, ஹீரோவாக நடிக்கும் ராஜீவ் பிள்ளையும் இந்த படம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அர்ஜூன் என்ற வேடத்தில் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பாக, சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையை, டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் இந்தியில் தயாரித்து வெளியிட்டனர். அதன்பின்னர், தென்னிந்தியாவை சேர்ந்த கவர்ச்சி நடிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் சிலரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க இந்தி சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.