நானும் நடிகர் சுஷாந்தும் காதலித்தோம். ஒன்றாக வாழ்ந்தோம் என பிரபல நடிகை போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பல ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு ஆறு மாதத்திற்கு முன்பிலிருந்து இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கமும் சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. இது பற்றி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சுஷாந்த் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது பணியாளர்களை அழைத்து, இதற்கு மேல் என்னால் சம்பளம் கொடுக்க முடியாது, அந்த சூழலில் நான் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் சுஷாந்த் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சுஷாந்துடன் இணைத்து காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 9 மணி நேரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இருவரும் ஒன்றாக வாழ்ந்ததை ரியா ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

நவம்பரில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், இடையில் சண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவரது மொபைலில் இருவரும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. இருவரும் அடிக்கடி சாட் செய்தும் வந்துள்ளனர். சண்டை போட்டு பிரிந்தாலும் தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் சுஷாந்த், ரியாவிடம் பேசி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதுவரை சுஷாந்த் மரணம் தொடர்பாக 13 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.