பிரபல மலையாள திரைப்பட நடிகர் திலீப்  நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் இவரை தனது இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் சந்தித்துப் பேசினார். மேலும் அவரை நடிகர்கள் ஜெயராம், கணேஷ்குமார், சீனிவாசன், விஜயராகவன் உள்ளிட்ட வேறு சில நடிகர்களும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை மீதான பாலியல் தொல்லை சம்பவத்தையடுத்து நடிகைகள் ரீமா கல்லிங்கல், மஞ்சுவாரியர், பூ பார்வதி, ரம்யா நம்பீஸன் உள்ளிட்ட பல நடிகைகள் இணைந்து பெண்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி மலையாள திரையுலகில் செயல்படுத்தி வருகின்றனர். இந்த அமைப்பினர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கேரள அரசின் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. 

அப்போது மேடையில் நடிகை ரீமா நடனம்ஆடினார். திடீரென்று அவர், நடிகை மீதான பாலியல் தாக்குதல் குறித்து தனது பாடலில் இணைத்து பாடினார். திலீப்பை சிறையில் சந்தித்த நடிகர்களுக்கு சவுக்கடிகொடுக்கும் வகையில் அவரது பாடல் வரிகள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்ப்பு தெரிவிப்பது போல் கையில் பதாகைகளை ஏந்தி வந்தார்.