நமது இணையதளத்தில் ஒரு வாரத்துக்கு முன்பே சொல்லியிருந்தபடி அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’படத்தின்  சென்னை, திருச்சி, சேலம் ஏரியாக்களில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்புவரை ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் தமிழக விநியோக உரிமை குறித்து பல்வேறு வதந்திகள் நிலவின. தயாரிப்பாளர் போனி கபூர் ‘விஸ்வாசம்’பட விலையைச் சொல்வதால் பலரும் தயங்கியதாகச் சொல்லப்பட்டது.இந்நிலையில் ’நேர்கொண்டபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், அப்படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எஸ் பிக்சர்ஸ் ஜி.சீனிவாசன், கே.ராஜமன்னார் மற்றும் ராகுல் ஆகியோர் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.இவர்களில் ஜி.சீனிவாசன் மற்றும் ராஜமன்னார் ஆகியோர் பிரபல விநியோகஸ்தர்கள். நடிகர் அஜீத்தே பரிந்துரை செய்தார் என்பதால் ராகுல் என்பவருக்கு அந்த உரிமையில் பங்கு வழங்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.

இவர்கள் சுமார் 43 கோடி மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தின் உரிமையைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.ஜி.சீனிவாசன் வட ஆற்காடு தென் ஆற்காடு பகுதி விநியோகஸ்தராகவும் இருப்பாராம். இன்னொரு விநியோகஸ்தரான் ராஜமன்னார் கோவை பகுதி விநியோகஸ்தராகவும் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் சென்னை, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் செங்கல்பட்டு பகுதிக்கு அருள்பதியும் மதுரைக்கு அழகரும் திருநெல்வேலிக்கு பிரதாப்பும் விநியோகஸ்தர்கள் என்று சொல்லப்படுகிறது.இப்படத்தின் விநியோக உரிமையைக் கொடுத்ததற்காக ஜி.சீனிவாசன், ராஜமன்னார், ராகுல் ஆகியோர் தயாரிப்பாளர் போனிகபூரைச் சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் விநியோக உரிமையை மூன்று ஏரியாக்களுக்கு பெற்றுள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார் உதயநிதி.