மனித ஜென்மத்திலிருந்து ஷிஃப்ட் ஆகி கொஞ்ச நாட்களுக்கு பேயாக உலாவி விட்டுத் திரும்பலாம் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு எடுத்த முடிவுக்கும் ஆப்படித்திருக்கிறது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். அவர் மிக விரைவில் படப்பிடிப்பு கிளம்புவதாக இருந்த ‘பேய் மாமா’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து 2006-ல் திரைக்கு வந்து வசூல் குவித்த இம்சை அரசன் 23-ம் புலிகேலி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார். அந்த படத்திலும் வடிவேலுவையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்று பெயர் வைத்து அரண்மனை அரங்கு அமைத்து படப்பிடிப்பையும் துவக்கினர்.

இதில் சில நாட்கள் நடித்த வடிவேலு, ஆடை வடிவமைப்பாளரை மாற்றியதில் தொடங்கி இயக்குநருக்கு பைத்தியம் பிடிக்குமளவுக்கு கரெக்‌ஷன்கள் சொல்ல ஆரம்பித்தார்.வடிவேலுவின் கருத்துக்கள் எதையும் ஏற்றுக்கொள்ள இயக்குநர் சிம்புதேவன் மறுத்த நிலையில்  அவருடன் தகராறு ஏற்பட்டு படத்தில் இருந்து விலகினார். இதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.

படம் நின்றுபோனதால் தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறியிருந்தார். இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் 24ம் புலிகேசி துவங்குவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. ஷங்கருக்கு 9 கோடி அல்ல தங்கர்பச்சான் இயக்கிய ஒன்பது ரூபாய் நோட்டைக்கூட தரமுடியாது என்பதில் வடிவேலு உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் சுமார் 4 தினங்களுக்கு முன்பு  வடிவேலு ‘பேய் மாமா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தில் வடிவேலுவின் தோற்றத்தையும் வெளியிட்டனர். இப்படத்தின் துவக்க கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்ததால் ஷக்தி சிதம்பரம் ‘பேய் மாமா’வைத் தற்காலிகமாகத் தள்ளிவைத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.