வீல் சேரில் அழைத்து செல்லப்பட்ட ராஷ்மிகா - செல்லத்துக்கு என்னாச்சு? பதறிப்போன ரசிகர்கள்
காலில் காயம் இருந்தபோதிலும், சாவா படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா வீல் சேரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தையும் பொருட்படுத்தாமல் அவர் தனது 'சாவா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள தயாராகி உள்ளார். மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜைப் பற்றிய வரலாற்று திரைப்படம் தான் சாவா. இப்படத்தில் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா.
அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது நடிகை ராஷ்மிகாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் ரெஸ்ட் எடுத்து வரும் ராஷ்மிகா, இன்று நடைபெறும் சாவா படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில், கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக காயத்தையும் பொருட்படுத்தாமல் விமானத்தில் பயணித்து மும்பை சென்றுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவை வீல் சேரில் விமான நிலையத்திற்குள் அழைத்து வந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகை ராஷ்மிகா தனது இடது காலில் பிளாஸ்டருடன் காரில் இருந்து கவனமாக இறங்குகிறார். பின்னர் ஒரு காலில் குதித்து குதித்து வந்து வீல் சேரில் அமர்ந்துகொண்ட அவரை அதில் வைத்து விமான நிலையத்திற்குள் அழைத்து செல்கின்றனர். அவரின் இந்த அர்ப்பணிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ச்சாவா பட ராஷ்மிகாவின் லுக்கை பார்த்து ரசிகர்கள் அப்செட்?
ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது எப்படி காயமடைந்தார் என்பதை ராஷ்மிகா ஏற்கனவே சமூக ஊடகங்களில் விளக்கியிருந்தார். தன் காலில் உள்ள காயத்தை புகைப்படமாக பதிவிட்டிருந்த அவர், வரும் வாரங்களில் குதிக்க முடியாது என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். அதேபோல் 'தமா', 'சிகந்தர்', 'குபேரன்' போன்ற படங்களின் படப்பிடிப்புகளுக்கு செல்ல முடியாததற்கும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
ரசிகர்கள் அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டியதோடு நடிகை நயன்தாராவோடு ஒப்பிட்டு பேசி வருகின்றனர். நடிகை நயன்தாரா தான் நடித்த படங்களின் புரமோஷனுக்கு செல்வதை தவிர்ப்பதை சுட்டிக் காட்டி உள்ள ரசிகர்கள், நடிகை ராஷ்மிகாவை பார்த்து கற்றுக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
லக்ஷ்மன் உதேகர் இயக்கியுள்ள 'சாவா', திரைப்படத்தில் விக்கி கௌஷல், சாம்பாஜி மகாராஜாக நடித்திருக்கிறார். அதேபோல் நடிகை ரஷ்மிகா, மகாராணி யேசுபாய் வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி மாதம் 14ந் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற உள்ளது. அதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... மூன்றே படத்தில் 3000 கோடி வசூல் அள்ளிய ஒரே ஹீரோயின்! யார் இந்த பாக்ஸ் ஆபிஸ் குயின்?