மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க, ஒருபக்கம் கடும்போட்டி நிலவி வருகிறது.  

'தலைவி' என்கிற பெயரில் இயக்குனர்கள் ஏ.எல்.விஜய்யும்,  'அயன் லேடி' என்கிற பெயரில் மிஷ்கினின் துணை இயக்குனர் பிரியதர்ஷினியும் அம்மாவின் வாழ்க்கை படத்தை, எடுக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.

மேலும் இயக்குனர் கௌதம் மேனன்,  பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக எடுத்து வருகிறார்.  'குயின்' என்ற பெயரில் உருவாகும் இந்த சீரிஸ், எம்எக்ஸ் ப்ளேயர் என்னும் இணைய ஒளிபரப்பு ஊடகத்தில் வெளியிடப்படவுள்ளது.  

சமீபத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் 'தலைவி' படத்தின் டீசர் வெளியாகி,  ஒரு சில விமர்சனங்களை சந்தித்தது. ஜெயலலிதா வேடத்திற்கு, கங்கனா சற்றும் பொருந்தவில்லை என்று வெளிப்படையாகவே பல ரசிகர்கள் கூறி இருந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் வெளியான 'குயின்' டீசரில் யாருடைய முகத்தையும் காட்டாமல் வெளியிட்டனர் குழுவினர். தற்போது முதல் முறையாக, 'குயின்' சீரிஸில், ஜெயலலிதாவாக நடித்துள்ள ரம்யா கிருஷ்ணாவின் கெட்அப் வெளியாகி உள்ளது. இதில் ரம்யா கிருஷ்ணாவை பார்ப்பதற்கு செம்ம கெத்தாக இருக்கிறார். உண்மையில் கங்கானாவை தூக்கி அடித்துவிட்டார் என்றே பல கருத்துக்கள் வருகிறது.

தமிழ் இந்தி தெலுங்கு பெங்காலி என நான்கு மொழிகளில் உருவாக உள்ள 'குயின்' சீரிஸில், ட்ரைலர் இம்மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.