‘இந்தியாவின் ஆக்‌ஷன் ஹீரோக்கள் அத்தனை பேரும் ஒரு நடிகையின் நடிப்புக்கு முன்னால் பூஜ்யமாகிவிட்டார்கள். ‘மணிகர்னிகா’ படத்தில் கங்கனா ரனாவத்தின் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து அப்படியே சிலிர்த்துப் போய்விட்டேன்’ என்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அடடே ராம் கோபால் வர்மாவுக்குள்ள  இப்படி ஒரு நல்ல மனுஷனும் இருக்கானா? என்று அவரது ட்விட்டர் பதிவைப் படித்து கிண்டலடிக்கிறது தெலுங்குத் திரையுலகம்.

ட்விட்டர் பதிவுகளில் அதிக பேரை கிழித்துத்தொங்கவிட்ட இந்தியர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் கண்டிப்பாக முதலிடம் ராம்கோபால் வர்மாவுக்குத்தான் என்று சொல்கிற அளவுக்கு சர்ச்சைக்குப் பேர் போனவர் வர்மா. அப்படிப்பட்டவர் நேற்று இரவு போட்ட பதிவு ஒன்றில் ‘மணிகர்னிகா’ நாயகி கங்கனா ரனாவத்துக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறார்.

அவரது பதிவில், ‘ப்ரூஷ்லியின் ‘எண்டர் த டிராகனுக்கு அடுத்து இப்போதுதான் ஒரு உண்மையான ஆக்‌ஷன் படத்தையும் ஆக்‌ஷன் ஹீரோவையும் பார்க்கிறேன். [நடுவில் உணர்ச்சி வசப்பட்டு கடுமையான ஒரு கெட்ட வார்த்தை]. இப்படத்தோடு ஒப்பிடும்போது நமது மற்ற ஆக்‌ஷன் ஹீரோக்களையெல்லாம் சாதாரண ஹீரோயின்கள் போல்தான் பார்க்கத்தோன்றுகிறது’ என்று உச்சி முகர்ந்திருக்கிறார் கங்கனா ரனாவத்தை.