இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த திரைப்படம்  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.  படத்தின் ஷூட்டிங் மற்றும் பிற நடிகர்கள், டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். கிரேன் விபத்து, கொரோனா லாக்டவுன், கமல் அறுவை சிகிச்சை என பல காரணங்களால் தள்ளிப்போன படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தான் ராம்சரணை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை ஷங்கர் ஆரம்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடி போட உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக, பிரபல தென்கொரிய நடிகையான பே சூஜி என்பவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பே சூஜி ஏற்கனவே ஷங்கரின் இந்தியன்-2 படத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகிது. ஆனால் இது குறித்த எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.