இரு வாரங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிக்கப்பட்ட சூர்யா, செல்வராகவன் காம்பினேஷனின் ‘என்.ஜி.கே’படத்தின் படப்பிடிப்பு நேற்றுதான் முடிவடைந்தது என்ற குட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு உடைத்திருக்கிறார் அப்பட நாயகி ராகுல் ப்ரீத் சிங்.

கடந்த ஒரு வருடமாக ஒரு டஜனுக்கும் மேலான பஞ்சாயத்துகளைச் சந்தித்து ஒரு வழியாக இறுதிக்கட்டத்துக்கு வந்தே விட்டது ‘என்.ஜி.கே’. அதன்படி இரு வாரங்களுக்கு  முன்பே நடந்த இறுதிநாள் படப்பிடிப்பில் யூனிட்டைச் சேர்ந்த அனைவருக்கும் நடிகர் சூர்யா ஒரு பவுன் தங்கச்சங்கிலி கொடுத்ததாக தயாரிப்பாளர் தரப்பில் செய்தி பரப்பப்பட்டது.

ஆனால் அதன் பிறகும் படப்பிடிப்பு நடந்ததையும், நேற்றுதான் படப்பிடிப்பு முடிந்தது என்கிற தகவலையும் ராகுல் பிரீத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேற்றைய இரவு அவர் பகிர்ந்த பதிவில், ‘செல்வா சாருக்கும், சூர்யா சாருக்கும் மிக்க நன்றி. ‘என்.ஜி.கே’ படம் நிகழ்த்தப்போகும் மேஜிக்கை திரையில் காணக் காத்திருக்கிறேன். படப்பிடிப்பு இன்றோடு முடிந்தது’ என்று பகிர்ந்திருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் ராகுல் பிரீத் சிங்குக்கு தமிழில் முகவரி கொடுத்த படம் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதன் வெற்றியால் ஒரே நேரத்தில் அண்ணன் சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’, தம்பி கார்த்தியுடன் ‘தேவ்’ படத்தில் நடித்து வந்தாலும், தமிழில் தனது லட்சியம் அஜீத் மற்றும் தனுஷுடன் ஜோடி சேருவதே என்கிறார்.

’தீரன் அதிகாரன் ஒன்று’இயக்குநர் விநோத் தான் ‘அஜீத் 60’ படத்துக்கும் இயக்குநர். ‘தீ அ.ஒ’ பட நாயகி ராகுல் பிரீத் சிங்தான். ரெண்டு முக்கிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அஜீத் பட ஆசையை வெலியிடுகிறார் என்றால் கூட்டிக் கழிச்சிப் பாருங்க...