நடிகர் சூர்யா, முதல் முறையாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள 'என்.ஜி.கே' திரைப்படம், வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது.  இந்த படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய்பல்லவி என இரண்டு நடிகைகள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இருவருக்கு படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை வந்ததாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து இரண்டு நடிகைகளும் எதுவும் கூறவில்லை.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகும் இந்த படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி, தற்போது படு வேகமாக நடைபெற்று வருகிறது.

நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற, என்.ஜி.கே படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அப்போது, நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் படப்பிடிப்பில் சாய்பல்லவியுடன் ஈகோ பிரச்சனை வந்ததாக கூறப்பட்டது குறித்து கேட்டனர். இதற்கு பதில் அளித்த ரகுல், இந்த படத்தில் தனக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் தான் கொடுக்கப்பட்டது. தங்களுக்குள் எந்த பிரச்னையும் எழவில்லை, இது முற்றிலும் வதந்தி என பதிலளித்தார். 

சாய்பல்லவி - ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் இதுவரை வெளியான தமிழ் படங்கள், இவர்களுக்கு மிகப்பெரிய ரீச் கொடுக்காத நிலையில், இந்த படம் இருவருக்குமே திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.