நடிகை ரகுல்ப்ரீத் சிங் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் படத்தில் கமிட் ஆகி நடித்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இதற்கு அவரே உண்மை தகவலை வெளியிட்டுள்ளார்.

'புத்தகம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்தவர் ரகுல்ப்ரீத் சிங். இதை தொடர்ந்து, என்னமோஏதோ , தடயரை தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும், இவரால் இதுவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை மட்டும் பிடிக்க முடியவில்லை.

அந்த வகையில் இவர் தமிழில் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் சிவகார்த்தியனுடன் நடிக்க இருந்த 'அயலான்'. இந்த படத்தில் ரகுல்ப்ரீத் சிங் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.

இந்நிலையில் திடீர் என கோடம்பாக்கத்து வட்டாரத்தில், 'அயலான்' படத்தில் இருந்து ரகுல் விலகி விட்டதாகவும்  , எனவே படக்குழு அவருக்கு பதில் மற்றொரு நடிகையை தீவிரமாக தேடி வருவதாகவும் ஒரு தகவல் பரவியது.

இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த ரகுல், இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை. தனக்கு எதிராக யாரோ இந்த மாதிரி தகவலை பரப்பி விடுகிறார்கள் என்றும், அயலான் படத்தில் இருந்து நான் விலகவில்லை, நான் நடிப்பது உறுதி என தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவல் தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் என நம்புவதாகவும் கூறியுள்ளார். 

வேற்றுகிரக வாசிகள் பற்றி உருவாகி வரும் இந்த படத்தை, இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார். இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.