குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் சொல்லாமல் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக சென்சார் சர்டிபிகேட் தராமல் இழுத்தடிக்கப்பட்ட இயக்குநர் ராஜு முருகனின் ‘ஜிப்ஸி’படத்துக்கு நேற்று ’ஏ’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசு படத்தை ஒரேயடியாக முடக்கிவிடுமோ என்று படக்குழுவினர் அஞ்சியிருந்த நிலையில் தற்போது நிம்மதிப்பெருமூச்சு விட்டுவருகின்றனர்.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கியிருக்கும்  திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜோக்கர் படத்தில் என்னங்க சார் உங்க சட்டம்’ என்று கேட்டு மத்திய, மாநில அரசுகளை திக்குமுக்காடச் செய்தார். மதவெறி, சாதிவெறி, பதவி வெறிகளை ஆட்டம் காண வைக்கும் வகையில், அடுத்த படமான ஜிப்ஸியிலும் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

அதனால் தான் சுமார் 4 மாத காலமாக  ஜிப்ஸி படத்தை அலைக்கழித்த சென்சார் அமைப்பினர் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க   இருமுறை மறுப்பு தெரிவித்தனர். காரணமில்லாமல் பல காட்சிகளை நீக்கக்கோரியதை இயக்குநரும் தயாரிப்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற நிலையில் படம் தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சில தினங்கள் காக்க வைக்கப்பட்ட நிலையில், ஆபாசக் காட்சிகளோ வன்முறைக் காட்சிகளோ இல்லாத நிலையிலும் படத்துக்கு ‘ஏ’சர்டிபிகேட் வழங்கியுள்ளது தீர்ப்பாயம்.

சமூகக் கருத்துக்களை பொட்டில் அறைந்ததுபோல் சொல்லும் ராஜூ முருகன் ‘ஏ’சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு அப்படி  என்னதான் படம் எடுத்திருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் பலரும் குழம்பி தவிக்கின்றனர். அவர் எடுத்துள்ளது அழகான காதல் கதை. அப்படிப்பட்ட காதலை இந்த மண்ணில் நடக்கும் சில அரசியல் நிகழ்வுகள் எப்படி சிதைத்து வீசுகின்றது, எப்படி காதலும் மனிதமும் மனிதர்களை இறுதியில் ஒன்று சேர்க்கிறது என்பதை தனது பாணியில்   எடுத்துள்ளாராம். தற்போது ‘ஏ’சர்டிபிகேட்டை அமைதியாக ஏற்றுக்கொண்ட ராஜூ முருகன் படம் திரைக்கு வந்ததும் சென்சாரில் நடந்தது என்ற தலைப்பில் பல அதிர்ச்சி செய்திகளை வெளியிடவுள்ளாராம்.