தனது புதிய படங்களில் கதைகளுக்கு இணையாக கதாநாயகிகள் செலக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படத்துக்கு மலையாள சினிமாவின் நயன்தாரா என்று அழைக்கப்படும் ரஜிஷா விஜயனை தமிழுக்கு இறக்குமதி செய்கிறார். இவரைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் வழக்கம்போல் சக ஹீரோக்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

’அனுராக கரிக்கின் வெல்லம்’படத்தின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன் மலையாளத்திரையுலகில் எண்ட்ரி கொடுத்த ரஜிஷா தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது பெற்றார். அடுத்து அவர் ‘ஜார்ஜட்டன்ஸ் பூரம்’,’ஒரு சினிமாக்காரன்’,’ஜூன்’ஆகிய மூன்றே படங்களில் நடித்திருந்தாலும் கேரளாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். குறிப்பாக ‘ஜூன்’படத்தில் 15 வயது முதல் 25 வயது வரையிலான தோற்றங்களில் அவரது நடிப்பு சிலாகிக்கப்பட்டது.

இவரை தமிழில் நடிக்க வைக்க ஏற்கனவே சில இயக்குநர்கள் முயற்சித்து வந்த நிலையில் கதை செட் ஆகாததால் தட்டிக்கழித்துவந்தார். இந்நிலையில் தனுஷின் யோசனைப்படி, ரஜிஷாவை சந்தித்து இயக்குநர் மாரி செல்வராஜ் சொன்ன கதை பிடித்துப்போகவே உடனே ஓ.கே.சொல்லிவிட்டாராம் ரஜிஷா. கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்குகிறது. இப்படத்துக்கு ‘கர்ணன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் ‘பரியேறும் பெருமாள்’போலவே வலுவான சமூகச் சாடல் உள்ள கதையையே மீண்டும் மாரி செல்வராஜ் கையில் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.