காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதரின் திருவுருவம் நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கம்.

அதன்படி கடந்த  ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து வரதராஜ பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக அத்திவரதர் வைக்கப்பட்டார்.

குளத்திலிருந்து எடுக்கப்படும் அத்திவரதர் மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 24 நாட்கள் சயன திருக்கோலத்திலும் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சயன திருக்கோலத்திலேயே 31 நாட்கள் காட்சியளித்த அத்திவரதர், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் நின்ற திருக்கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான விஐபிக்களும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

இதனிடையே அத்திவரதரை நிரந்தரமாக தரிசனத்திற்கு வைக்க வேண்டும், கூடுதலாக 48 நாட்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதரின் திருவுருவம் மீண்டும் அனந்தசரஸ் குளத்தின் நீருக்குள் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவுருவம் குளத்திற்குள் வைக்கப்படும்போது கோவிலின் அர்ச்சகர்கள், ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் கோவிலுக்குள் அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதாவுடன் சேர்ந்து வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு காஞ்சிபுரம் வந்த ரஜினிகாந்த், மனைவியுடன் அத்திவரதர் முன்பு அமர்ந்து நெக்குருக வழிபட்டார். ரஜினி வருகையையொட்டி அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனிடையே வருகின்ற 16-ந் தேதி வரை மட்டும் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், நாட்கள் நெருங்க நெருங்க லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். வருகின்ற 17-ந் தேதி அன்று வேத மந்திரங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ளே மீண்டும் அத்திவரதர் வைக்கப்படுகிறார்.