சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலருக்கு ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  இன்று தனது 70வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இதனால் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, நேற்று இரவு முதலே ரஜினியின் ரசிகர்கள் போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன் கூடி வருகிறார்கள். சரியாக இரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடி தங்களுடைய வாழ்த்தை தெரிவித்தனர்.

மேலும் ரசிகர்கள் பலர், அவரது பிறந்தநாளான இன்று எப்படியும் ரஜினியை பார்த்துவிட வேண்டும் என, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து குவிந்துள்ளனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை சந்திக்க மாட்டார் என கூறியதால், அவர் தற்போது போஸ் தோட்ட இல்லத்தில் இல்லை என்பதாலும் கும்பல் கும்பலாக வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களை தாண்டி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் ட்விட்டர் மூலமாகவும், நேரடியாக அவருக்கு போன் செய்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் தனக்கு வாழ்ந்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது... இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் , எதிர்க்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும், என் நல விரும்பிகளுக்கும், சக திரைகலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், மற்றும் உச்சகத்துடன் என் பிறந்தநாளை கொண்டாடி வரும் உலகெங்கிலும் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என் ரசிகப்பெரு மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு, மரியாதைகூறிய மோடி ஜி அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.