பேட்ட படப்பிடிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சென்றுள்ள ரஜினியை பா.ஜ.க நிர்வாகிகள் வரிசையாக சென்று சந்தித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் பேட்ட. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. லக்னோவில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பை கார்த்தி சுப்பராஜ் நடத்தி வருகிறார்.

ரஜினியின் படம் என்பதால் படப்பிடிப்பு நடத்த லக்னோ அதிகாரிகள் பெரிய அளவில் எந்த கெடுபிடியும் காட்டுவதில்லை. மேலும் பேட்ட படப்பிடிப்பு நடைபெறும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் மேல் ரஜினிக்கு என்று போலீசார் 10 பேர் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். ரஜினி தங்கியுள்ள இடத்திற்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதனிடையே படப்பிடிப்பின் இடைவெளியில் லக்னோவின் முக்கியஸ்தர்கள் ரஜினியை ஆர்வத்துடன் சந்தித்து செல்கின்றனர். ரஜினியும் எத்தனை பேர் வந்தாலும் அனைவரையும் சந்தித்து வழி அனுப்பி வைக்கிறார். 

அந்த வகையில் உத்தரபிரதேச மாநில பா.ஜ.க நிர்வாகிகள், லக்னோவை சேர்ந்த உள்ளூர் பா.ஜ.க பிரமுகர்களும் ரஜினியை ஆர்வத்துடன் சந்திக்க வருகின்றனர்.வருபவர்களை சந்திக்கும் ரஜினி உத்தரபிரதேச அரசியல் நிலவரம் குறித்து அவர்களிடம் விசாரித்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது.

 

மேலும் பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் ரஜினி எப்போது கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்றே கேள்வி எழுப்புகின்றனர். அவர்களிடம் ரஜினி அது ஆண்டவன் கைகளில் தான் உள்ளது என்று பதில் அளித்து வருகிறாராம். நாளுக்கு நாள் ரஜினியை சந்திக்க வரும் முக்கியஸ்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால், படப்பிடிப்பு நடைபெறுவது உத்தரபிரசேதத்திலா இல்லை தமிழகத்திலா என்று படக்குழுவினர் பேசிக் கொள்கிறார்களாம்.